Published : 10 Nov 2020 02:30 PM
Last Updated : 10 Nov 2020 02:30 PM

பள்ளி மாணவர்கள் எளிதாகச் சுவாசிக்க கதர் முகக்கவசம்: அருணாச்சலப் பிரதேசத்தில் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்குக் கதரால் ஆன முகக்கவசங்களை வழங்க அருணாச்சலப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 60,000 கதர் முகக் கவசங்களை வாங்கியுள்ளது.

கரோனா தொற்று அச்சம் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளிகளும் மூடப்பட்டன. இதற்கிடையே பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நவம்பர் 16ஆம் தேதி அன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட உள்ளன.

அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருணாச்சலப் பிரதேச அரசு அனைத்து மாணவர்களுக்கும் முகக்கவசங்களை வழங்க முடிவு செய்தது. இதற்காக காவி, வெண்மை, பச்சை ஆகிய மூவர்ணங்களால் ஆன கதரால் செய்யப்பட்ட பருத்தி முகக்கவசங்களை வழங்கவும் திட்டமிட்டது.

இதைத் தொடர்ந்து மாநில காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில் முகக்கவசங்களைத் தயாரிக்க நவம்பர் 3 ஆம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டது. 6 நாட்களில் அனைத்து முகக்கவசங்களும் தைக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. முறுக்கப்பட்ட இரட்டை கதர்த் துணி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கதரால் ஆன இந்த முகக்கவசத்துக்கு உள்ளே 70 சதவீத ஈரப்பதம் தக்க வைக்கப்படும் என்பதால் மாணவர்கள் எளிதில் சுவாசிக்க ஏற்றதாக இருக்கும். இது துவைத்து, மீண்டும் பயன்படுத்தக் கூடிய, எளிதில் மட்கக்கூடிய முகக்கவசம் ஆகும்.

இதுகுறித்து மாநில காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா கூறும்போது, ''இந்த முன்னெடுப்பு மூலம் காதி தொழிலாளர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x