Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

‘இந்து தமிழ் திசை’, ‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’: மருத்துவப் படிப்புகளுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள்- கருத்துப் பகிர்வு, ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அறிவுரை

மருத்துவப் படிப்புகளுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி, உலகம்முழுவதும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’, ‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்’ இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இம்மாத இறுதியில் மருத்துவக் கலந்தாய்வு நடக்க உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், ‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்’ உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தலைப்பில் நீட் - மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான ஆன்லைன் கருத்துப் பகிர்வு, வழிகாட்டி நிகழ்ச்சியை கடந்த 8-ம் தேதி நடத்தியது. இதில் மூத்த கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் எஸ்.கீதாலட்சுமி: நீட் தேர்வு முடிவு வெளியாகி, மருத்துவக் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பரபரப்போடும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கக் கூடும்.

இணையதளத்தில் கலந்தாய்வு விவரம்

மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் தமிழகஅரசின் சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in) விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் அந்த இணையதளத்தை பார்த்து கலந்தாய்வு தொடர்பான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ் படிப்பில் 78,333 இடங்கள் உள்ளன. இதோடு, ஜிப்மரில் 1,400 இடங்கள் உள்ளன. மாநிலங்களில் பார்த்தால் ஒவ்வொரு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 7,400 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,300 இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். அதேபோல, பிடிஎஸ் படிப்பில் தேசிய அளவில் 26,773 இடங்கள் உள்ளன. இவ்வாறு, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் கணிசமான இடங்கள் இருக்கவே செய்கின்றன.

குறைந்த மதிப்பெண் பெற்றாலும்...

எனவே, நீட் தேர்வில் சற்று குறைந்தமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்கூட இறுதிகட்ட கலந்தாய்வு முடியும் வரை காத்திருந்தால், ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம்கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே,தமிழக மாணவர்கள் இங்கு உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் தயாராக இருக்க வேண்டும்.

வேறு மாநிலத்துக்கு சென்று படிக்க வேண்டுமா என்றெல்லாம் எண்ணக் கூடாது. மன தைரியம் இருந்தால், எந்த மாநிலத்துக்கும் சென்று படிக்க முடியும். அனைத்து மாநிலங்களிலுமே மருத்துவக் கல்வியின் தரமும், தேர்வுமுறையும் ஒன்றுதான் என்பதை உணர வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்காவிட்டால் சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற இந்திய முறை மருத்துவப் படிப்புகளிலும் தாராளமாக சேரலாம். இதுபோன்ற மருத்துவப் படிப்புகளுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் தற்போது சித்தா பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. எனவே, சித்தா படித்தால் அரசு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவப் பிரிவுகள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, இவற்றை படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடம் கிடைக்காதவர்கள் நர்ஸிங், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளிலும் தாராளமாக சேர்ந்து படிக்கலாம். மருத்துவப் படிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.

சென்னை மற்றும் நாமக்கல் ஸ்பைரோஇன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை செயல்அலுவலர், கல்வியாளர் எஸ்.எம்.உதயகுமார்: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவ தேர்வுக் குழு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடனும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடனும் இருக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நீட் தேர்வு எளிதாகவே இருந்தது. மேலும், மே மாதம் நடத்தப்பட வேண்டிய நீட் தேர்வு, செப்டம்பரில்தான் நடத்தப்பட்டது. எனவே, தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு கூடுதலாக 4 மாத அவகாசம் கிடைத்தது. இதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கையும், ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு

மேலும், இந்த ஆண்டு முதல்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் (ஓசி, பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி, எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி) இந்த உள்ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

இவற்றின் காரணமாக, கட்-ஆஃப்மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரிக்கவே செய்யும். உத்தேசமாக கணக்கிட்டால் கட்-ஆஃப் மதிப்பெண் ஓசி பிரிவில் 580 வரையும், பிசி பிரிவில் 530, எம்பிசி பிரிவில் 540, எஸ்சி பிரிவில் 450, எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 400, எஸ்டி பிரிவில் 300 வரையும் வரலாம்.

இப்போதிருந்தே தயாராகுங்கள்

அடுத்த ஆண்டு நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்படலாம் என்று தோன்றுகிறது. எனவே, இப்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும், அதேபோல இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று கருதும் மாணவர்களும் இப்போதிருந்தே அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகிவிடுவது நல்லது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1 படிக்கும்போதே தேர்வுக்கு தயாராகத் தொடங்குவது மிகவும் நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மருத்துவக் கலந்தாய்வு மற்றும் பல்வேறு மருத்துவப் படிப்புகள் குறித்த மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://bit.ly/3k8YWqw என்றயூ-டியூப் லிங்க்கில் பார்த்து பயன் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x