Last Updated : 09 Nov, 2020 03:58 PM

 

Published : 09 Nov 2020 03:58 PM
Last Updated : 09 Nov 2020 03:58 PM

தேசிய நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு வேளாண். பல்கலை. மாணவர்கள் தேர்ச்சி: முதுநிலை, பிஎச்டி படிப்புகளில் சேர வாய்ப்பு

கோவை

அகில இந்திய நுழைவுத்தேர்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதுநிலை, பிஎச்.டி. படிப்புகளில் சேரத் தகுதி பெற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் முதுநிலை மற்றும் பிஎச்.டி. பட்டப் படிப்புகளுக்கு, ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து, இந்தியாவில் உள்ள பிற வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில், ஊக்கத்தொகையுடன் மேற்படிப்புப் படிக்க வாய்ப்பு அளிக்கிறது.

இதன்படி இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த நவ.7-ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் முடித்த சுமார் 500 பேர் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மாணவி மு.காளீஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர்களுடன் துறைகள் அளவில் டி. பவித்ரா வேளாண் சமூக அறிவியல் துறையில் 2-ம் இடம், பூஜா சக்தி ராம் வேளாண் பொறியியல் துறையில் 3-ம் இடம், மாணவர் அருட்செல்வம் நீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் 4-ம் இடம், மு. நவீன்குமார் பூச்சியியல் துறையில் 7-ம் இடம், துர்கா தேவி தாவர உயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் 10-ம் இடம், அபிநயா உணவு ஊட்டச்சத்து துறையில் 17-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதுநிலை வேளாண் படிப்பிற்கான அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் டி. ஸ்ரீ சொர்ணா, திறன் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முதலிடத்தையும், டி. ஸ்ரீநயனா வந்தனா, தாவர நோயியல் துறையில் முதலாமிடத்தையும் மற்றும் மாணவர் சிவக்குமார், தாவர மரபியல் துறையில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேபோல் உறுப்புக் கல்லூரி இளநிலை மாணவர்கள் 185 பேர் ஊக்கத்தொகையுடன் கூடிய படிப்பில் சேர தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 35 பேர் கோவை, 20 பேர் திருச்சி, 20 பேர் பெரியகுளம் வேளாண்மைக் கல்லூரிகளில் படித்தவர்கள். 42 பேர் தோட்டக்கலைப் படிப்புக்கும், 35 பேர் தாவர அறிவியல் படிப்புக்கும், 24 பேர் பூச்சியியல் படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் கூறும்போது, 'கடந்த ஆண்டு முதல் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள அனைத்துத் துறை மாணவர்களுக்கும் தேசிய அளவிலான வேளாண் நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள, ஆசிரியர்களால் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாகக் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன்மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதுடன், பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலிலும் முன்னிலை பெற முடிந்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், விடா முயற்சியுடன் படித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகள்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x