Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைப்பு விவரம் விரைவில் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை குறைப்பதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாடத் திட்டத்தை 40 சதவீதம் வரை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டிருந்தது.

பாடத் திட்டக் குறைப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய விவரங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கல்வி ஆண்டு தாமதத்தை ஈடுசெய்ய 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு 40 சதவீதமும், 11, 12-ம்வகுப்புகளுக்கு 30 சதவீதமும் பாடஅளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றம் செய்யாமல், உதாரணங்கள், கூடுதல் விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், 11, 12-ம் வகுப்புபாடத் திட்டங்கள் மாணவர்களின்உயர்கல்விக்கு அடிப்படையானது ஆகும். நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற பாடங்களைமுழுமையாக படித்தாக வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடத் திட்டக் குறைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மொத்தம் உள்ள பாடங்கள் முதன்மை மற்றும் விருப்பம் உள்ளவை என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை பகுதியில், முக்கியமான 70 சதவீத பாடங்கள் இடம்பெறும். இதில் இருந்துதான் பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். அதேபோல,விருப்பம் உள்ள பகுதியில் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய 30 சதவீத பாடங்கள் இருக்கும். இதை மாணவர்கள் சுயமாக படித்துக்கொள்ள வேண்டும்.

குறைக்கப்பட்ட பாடத் திட்ட விவரங்கள் முதல்வர் மூலம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்களை ஆசிரியர்கள் நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x