Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அத்தாட்சி சான்றிதழ் வழங்க குழு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அத்தாட்சி சான்றிதழ்களை வழங்க முதன்மை கல்விஅலுவலகங்களில் சிறப்பு குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க, நவ.12-க்குள் விண்ணப்பிப்பதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை சமர்ப்பிக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அதனால் மாணவர்களுக்கு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்குவதற்கான பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர், அலுவலக பிரிவு உதவியாளர் அடங்கிய பிரத்யேக குழு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும்அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழு சான்றிதழ் கோரி வரும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

அலைக்கழிக்கக் கூடாது

மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், இறுதியாக பிளஸ் 2படித்த மேல்நிலைப் பள்ளிகளில்தான் அத்தாட்சி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து கையொப்பமிட வேண்டும். இதுதவிர மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளியில் படித்திருந்தால் குழுமூலம் பிற பள்ளியின் ஆவணங்களை சரிபார்த்து சான்றிதழில் முதன்மைக் கல்வி அதிகாரிகள் கையொப்பமிட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மாணவர்களை பிற பள்ளிகளில் சென்றுகையொப்பம் பெற்று வரக் கூறி அலைக்கழிப்பு செய்யக்கூடாது.

அதேபோல், சான்றிதழ் பெறும் மாணவர்களின் விவரங்களை முறையாக அலுவலகங்களில் பராமரிக்க வேண்டும். மேலும், இந்த பணிகளை எவ்வித புகார்களுக்கும் இடம் தராமல் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x