Published : 03 Nov 2020 05:51 PM
Last Updated : 03 Nov 2020 05:51 PM

ஸ்மார்ட் கிளாஸ் அனாமிகாவின் முதிர்ச்சி ஆச்சரியப்படுத்துகிறது!- முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நேரில் வாழ்த்து

கரோனா காலத்தில் தனது குடிசையையே பாடசாலையாக்கிச் சக மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வரும் மாணவி அனாமிகாவை, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

பொதுமுடக்கத்துக்கு நடுவே மாணவர்களுக்கு எந்த வழிமுறையைப் பயன்படுத்திப் பாடம் நடத்துவது என அரசுகள் தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில், தனது ஓலைக்குடிசை வீட்டையே வகுப்பறையாக்கிப் பாடம் எடுத்து வருபவர் 8-ம் வகுப்பு மாணவி அனாமிகா. கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த இவர், தன் கிராமத்தைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். இப்பள்ளிக்கு 'குட்டிக்கூட்டம் ஸ்மார்ட் கிளாஸ்' என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

மலையாளம், ஜெர்மனி, தமிழ் ஆகிய மொழிப் பாடங்களுடன் கணிதம், சமூக அறிவியல் பாடங்களும் இங்கு நடத்தப்படுகின்றன. விளையாட்டு, இசைப்பாடல் போன்றவையும் உண்டு. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அனாமிகா வைரலானார். இவரைப் பற்றி 'இந்து தமிழ் திசை' இணையத்தில் செய்தி வெளியிட்டோம்.

தொடர்ந்து, கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட 'யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம்' அமைப்பின் 'யூத் ஐகான்' விருதுக்கும் அனாமிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள வனத் துறையினர் வனாயனம் திட்டத்தின் ஒரு பகுதியாக அனாமிகா தலைமையிலான மாணவிகளை 'சைலன்ட் வேலி' பகுதிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று சூழல் சிறப்புப் பயிற்சிகள், பரிசுகளைத் தந்து கவுரவித்தனர்.

இப்படிப் பல திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அனாமிகாவின் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிக்கு நேற்று வருகை புரிந்தார்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடிய பாலகுருசாமி, அனாமிகாவின் கல்விச் சேவையை மனதாரப் பாராட்டினார். தான் நடத்திவரும் கல்வி அறக்கட்டளை மூலம் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். “அனாமிகாவின் முதிர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஊடகங்களில் செய்தி பார்த்தவுடனேயே இவரைச் சந்தித்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்” என்றும் பாலகுருசாமி குறிப்பிட்டார் .

இதுகுறித்து அனாமிகாவின் தந்தை சுதிர் நம்மிடம் பேசும்போது, ''முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி போன்ற கல்வியாளர்கள் நேரில் வந்து பாராட்டுவது அனாமிகாவுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த மாணவ - மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனாமிகாவையும் குழந்தைகளையும் சிறப்பிக்க முடிவு செய்திருக்கும் அவர், கோவையில் உள்ள தனது அறக்கட்டளைக்குத் தீபாவளிக்கு முன்தினம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x