Last Updated : 31 Oct, 2020 06:08 PM

 

Published : 31 Oct 2020 06:08 PM
Last Updated : 31 Oct 2020 06:08 PM

நவ.16 முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறப்பு: அசாம் அறிவிப்பு

அசாமில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது.

இதன்படி, சில மாநிலங்களில் செப்.21 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக, ஆந்திரா, அசாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் ஆந்திரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஏ.கே.த்ரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''நவம்பர் 16-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக் கல்வித்துறையின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிகள் இயங்கும்

பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்தவும், அவற்றைத் திருத்தவும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆன்லைன் கல்வி முறையைத் தொடரவும் ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காகப் பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வகப் பணி தேவைப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுகலை மாணவர்களும், பிஎச்.டி. மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x