Last Updated : 27 Oct, 2020 06:32 AM

 

Published : 27 Oct 2020 06:32 AM
Last Updated : 27 Oct 2020 06:32 AM

அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடரும் இழுபறி: உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிப்பால் மாணவர்கள் தவிப்பு

சென்னை

அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பின் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏஐசிடிஇ எதிர்ப்பு

இந்த அறிவிப்பு அரியர் வைத்திருந்த 8 லட்சம் மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்கும் பணிகளை உயர்கல்வித் துறைதீவிரப்படுத்தியது. இந்நிலையில் அரியர்பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

இளநிலை பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால்மட்டுமே முதுநிலை படிப்புக்கான சேர்க்கைக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உயர்கல்வித் துறை பின்பற்றும் விதியாகும். இதன் காரணமாக வெவ்வேறு பருவங்களில் அரியர் வைத்துள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியாத சூழல் நிலவுகிறது.

அதேபோல், முதுநிலை பட்டப்படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் பிஎச்.டி உட்பட தங்களின் உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை மாணவர்களிடம் கடும் மன உளைச்சலையும், அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்வதில் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ,எம்இ, எம்.ஆர்க் போன்ற பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் மற்றும்முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விதிகளில் திருத்தம்

அதேநேரம் அறிவித்தபடி அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால்,உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும்வரைஇந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளை மேற்கொள்ள முடியாது. இதற்கு தற்காலிக தீர்வாக நடப்பு ஆண்டு மட்டும் விதிகளில் திருத்தம் செய்து பட்டப்படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளஅரசு அனுமதிக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் செல்வக்குமார், ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் கூறியதாவது: அரியர் தேர்வு முடிவு நிறுத்திவைப்பால் உயர்கல்வி மட்டுமின்றி வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகளை பெற்றிருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் மாணவர்கள் பாதிப்பு

தற்போதைய சூழலில் வாய்ப்பிருந்தும் மாணவர்கள் தங்களுக்கான மாத வருவாயை பெறமுடியாத தவிப்பில் உள்ளனர். இவை பொருளாதாரரீதியாக அவர்கள் குடும்பங்களுக்கு பெரிதும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும்,பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டுபடிக்கும் மாணவர்கள் பலரின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையே பல்வேறு வெளிமாநிலபல்கலை.களில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுகிறது.

எனவே, கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அரியர் மற்றும் பருவத்தேர்வில் நிலவும் சிக்கல்களைக் களைந்து அவர்களின் எதிர்காலத் திட்டங்களை நோக்கி பயணிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி பல்வேறு இறுதி ஆண்டு மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது. இம்முடிவை பல்கலை. மறுபரிசீலனை செய்வதுடன், குறைந்தது அந்த மாணவர்களுக்கான மாற்று தேர்வுகளையாவது விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x