Published : 27 Oct 2020 06:28 AM
Last Updated : 27 Oct 2020 06:28 AM

தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கும் புதிய திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில் மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் ‘கற்போம், எழுதுவோம்’ என்ற புதிய, வயது வந்தோர் கல்வித் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட இருக்கிறது.

இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாநில பள்ளி சாராமற்றும் வயது வந்தோர் கல்விஇயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எழுத, படிக்கத் தெரியாமல் உள்ள 1 கோடியே 24 லட்சம் பேரில் முதல்கட்டமாக 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களின் விவரங் களை மிக விரைவாக சேகரிக்க வேண்டும். இப்பணியை பள்ளி,கல்லூரி மாணவர்கள், என்எஸ்எஸ், என்சிசி, ஸ்கவுட் மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், 100 நாள் திட்டப் பணியாளர்கள், கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் போன்றோரின் உதவியுடன் மேற்கொள்ளலாம். மேலும், ஆர்வமுள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள், படித்த இளைஞர்கள், வயது வந்தோர் கல்வி திட்டங்களில் பணியாற்றிய அனுபவம்உடையவர்கள், தன்னார்வலர்களின் உதவியையும் நாடலாம்.

இந்த புதிய திட்டத்தின்கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் கல்வியறிவு மையங்களாக செயல்படும். இந்த மையங்கள் பள்ளி வேலைநாட்களில் மட்டும்தினமும் 2 மணி நேரம் செயல்படும். இங்கு படிப்பவர்களுக்கு ஓராண்டில் 3 முறை இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வை தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் நடத்தும். இந்த மையங்கள் நவ.23 முதல் செயல்படும்.

இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x