Published : 27 Oct 2020 06:25 AM
Last Updated : 27 Oct 2020 06:25 AM

பழைய இரும்பு விற்பவரின் மகன் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் வெற்றி: உத்தரபிரதேசத்தில் 8 தோல்விகளுக்குப் பிறகு சாதனை

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் வசிப்பவர் அரவிந்த் (26). இவரது தந்தை பிக்ஹாரி, பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் டீலராக இருக்கிறார். ஏழ்மை நிலையில் உள்ள பிக்ஹாரியை கிராம மக்கள் மிகவும் ஏளனமாக நடத்தி உள்ளனர். அவருடைய பெயர் பிக்ஹாரி என்றும் அவர் செய்யும் தொழிலையும் வைத்து அவரை ‘யாசிப்பவர்’ என்று பல ஆண்டுகளாக கிராம
மக்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த பிக்ஹாரியின் மகன், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எட்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வியையே அரவிந்த் சந்தித்தார். எனினும், விடா முயற்சி செய்து 9-வது முறை தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஏளனம் பேசிய கிராம மக்க
ளுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் முறையாக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை முதல்முறையாக எழுதினார் அரவிந்த். தற்போது அந்தத் தேர்வுக்குப் பதில் நடத்தப்படும் நீட் தேர்வுகளையும் எழுதி வந்தார். எனினும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்தது.

இதுகுறித்து அரவிந்த் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 9-வது முறையாக எழுதி ஓபிசிபிரிவில் அகில இந்திய அளவில் 4,392-வது இடத்தைப் பெற்றேன்.

தொடர்ந்த தோல்வி அடைந்தாலும், மனம் உடைந்துவிட வில்லை. தடைகளாக அமைந்தஎல்லாவற்றையும் வெற்றி படிகளாக மாற்றுவதற்கு முயற்சித்தேன். என்னுடைய வெற்றிக்கு எனது குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்புதான் காரணம்’’ என்றார்.
அரவிந்த் தந்தை பிக்ஹாரி கூறும்போது, ‘‘நான் 5-ம் வகுப்பு வரைதான் படித்தேன். என்மனைவி லலிதா தேவி பள்ளிக்கு சென்றதில்லை. எனக்கு 3 குழந்தைகள். அரவிந்த் 10-ம்வகுப்பு தேர்ச்சி அடைந்தார். அதில் 48.6 சதவீத மதிப்பெண்தான் பெற்றார்.

ஆனால், பிளஸ் 2-வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இதுஎங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x