Last Updated : 22 Oct, 2020 02:16 PM

 

Published : 22 Oct 2020 02:16 PM
Last Updated : 22 Oct 2020 02:16 PM

உதவிப் பேராசிரியர், நூலகர் பணியிடங்களுக்கு நெட், செட் தேர்ச்சித் தகுதியை நிர்ணயிக்க வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகம் கலை, மொழி, அறிவியல், பொறியியல் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், பல்கலைக்கழக நூலகர், துணை நூலகர், உதவி நூலகர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “உதவிப் பேராசிரியர், நூலகர் பணியிடங்களுக்கு பிஎச்.டி. கல்வித் தகுதியைக் கட்டாயத் தகுதியாக அறிவித்துள்ளது. மேலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு 'நெட்' தகுதித் தேர்வு இல்லாத காரணத்தால், பிஎச்.டி. படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கலை, அறிவியல், மொழி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி நூலகர் பணியிடங்களுக்கு பிஎச்.டி. படிப்பை கட்டாயத் தகுதியாக நிர்ணயித்து இருப்பது, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு எதிரானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு நெட், செட் சங்கச் செயலாளர் தங்க முனியாண்டி கூறியதாவது:

''பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 1991-ம் ஆண்டு வெளியிட்ட நெறிமுறைகளில் இருந்து, 2018-ம் ஆண்டு வெளியிட்ட நெறிமுறைகள் வரை உதவிப் பேராசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி, நெட் தகுதித் தேர்வு தேர்ச்சியை மட்டுமே தகுதியாக நிர்ணயித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு பிஎச்.டி. தேர்ச்சியில் இருந்து விலக்கு என்பதைத்தான் யுஜிசி நெறிமுறை காட்டுகிறது.

நெட் தகுதித் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல வழக்குகளில், இதுவே தகுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு, யுஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.

இணையதளத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, பிஎச்.டி. தகுதி கேட்கப்படுவதால், நெட், செட் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்று, யுஜிசி நெறிமுறைகளுடன் கூடிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு தங்க முனியாண்டி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x