Published : 22 Oct 2020 12:59 PM
Last Updated : 22 Oct 2020 12:59 PM

2 சுற்றுக் கலந்தாய்வு நிறைவு: ஒரு இடம் கூட நிரம்பாத 124 பொறியியல் கல்லூரிகள்

பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத சூழல் நிலவுகிறது.

தமிழகப் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகின.

விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்.8-ம் தேதி தொடங்கியது. அதில், குறைவான மாணவர்களே கலந்து கொண்டனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.

இதேபோல், 2-வது சுற்றிலும் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கலந்து கொண்டனர். கலந்தாய்வில் கலந்துகொள்ள 22,903 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13,415 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 461 கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.

391 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பின. 30 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில், 20,925 இடங்கள் அதாவது 13 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இரண்டு சுற்றுகளின் முடிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் மொத்தமாக 40 சதவீதம் (14,241 மாணவர்கள்) பேர் கலந்து கொள்ளவில்லை. இதுவே கடந்த ஆண்டில் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 9,393 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x