

காஷ்மீர் மளிகைக் கடைக்காரரின் இரட்டை மகன்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தின் பத்போரா கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் அருகில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரின் இரட்டை மகன்கள் கெளஹார் பஷீர் மற்றும் ஷாகிர் பஷீர் இருவரும் நீட் தேர்வில் முறையே 657 மற்றும் 651 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கெளஹார் பஷீர் கூறும்போது, ''என்னுடைய பெற்றோருக்கு மிகப்பெரிய நன்றியைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவர்கள்தான் எப்படிப்பட்ட சூழலிலும் நாங்கள் படிப்பை மட்டும் கைவிட்டு விடக்கூடாது என்று வலியுறுத்துவார்கள். எல்லாவற்றிலும் 100 சதவீத அர்ப்பணிப்பையும் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சரிவிகிதத்தையும் பேணச் சொல்வார்கள்'' என்று தெரிவித்தார்.
தன் சகோதரனின் உணர்வுகளையே ஷாகிரும் பிரதிபலிக்கிறார். அவர் கூறும்போது, ''எங்களின் வெற்றியில் பெற்றோர் முக்கியப் பங்கு வகித்தார்கள். கடின உழைப்பின் முக்கியத்துவத்தைப் போதித்தார்கள். வீட்டில் பணக் கஷ்டம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் படிக்க மட்டுமே சொன்னார்கள்'' என்றார்.
இருவரின் தந்தை பஷீர் அகமது கூறும்போது, ''எங்களிடம் பொருளாதாரம் பெரிய அளவில் இல்லை என்றபோதிலும் மகன்கள் இருவரும் படிக்கவேண்டும் என்பதில் நானும் மனைவியும் உறுதியாக இருந்தோம். மாதந்தோறும் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். சில நேரங்களில் சாலையோரங்களில், கிடைக்கும் வேலையைச் செய்தும் சம்பாதிப்போம்.
தற்போது மகன்கள் இருவரையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் தங்களின் பெற்றோரை மட்டுமல்ல ஒட்டுமொத்தப் பள்ளத்தாக்கையுமே பெருமைப்படுத்தி விட்டார்கள்'' என்றார்.