Last Updated : 20 Oct, 2020 01:01 PM

 

Published : 20 Oct 2020 01:01 PM
Last Updated : 20 Oct 2020 01:01 PM

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகுமா?- 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

'நீட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்தள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் வாய்ப்பு உள்ளதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தகுதித்தேர்வு, கடந்த செப்.13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த அக்.16-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றே தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இவர்களின் மருத்துவக் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. இதனையே ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

மருத்துவம் படிக்க வாய்ப்பு

இது குறித்து 'நீட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கூறும்போது, ''எங்களில் பலர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளோம். மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில், பள்ளிகளில் நடத்தப்பட்ட 'நீட்' தகுதித் தேர்வு வகுப்புகளில் பயிற்சி பெற்றோம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பெற்றோரின் ஊக்கமும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தன. இதனால் 'நீட்' தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளோம்.

ஆனால், குறைந்தபட்ச மதிப்பெண்ணே கிடைத்துள்ளது. மருத்துவராக வேண்டும் என்று எல்லா மாணவர்களைப் போல, எங்களுக்கும் ஆசைதான். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே எங்களுக்கு இடம் கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி கிடையாது. எங்களில் பலர் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள். எங்களைப் போன்ற ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும்'' என்றனர்.

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு

இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் (செய்தித் தொடர்பு) வி.எம்.மைக்கேல்ராஜ் கூறியதாவது:

''அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர மிகவும் ஆர்வமாக உள்ளனர். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது, மாதிரித் தேர்வுகளில் பங்கேற்பது என ஈடுபாட்டுடன் படித்தனர். எனினும் 'நீட்' தகுதித் தேர்வில் பலர் குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் பெற்றுதான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதை தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழகம் மனதார வரவேற்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஏழை மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் கிடைக்க, தமிழக ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக அரசும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு மைக்கேல்ராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x