Published : 20 Oct 2020 07:12 AM
Last Updated : 20 Oct 2020 07:12 AM

‘இந்து தமிழ் திசை’ - சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: பொறியியல் மாணவர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள்; பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து வல்லுநர்கள் விளக்கம்

சென்னை

தொழில் நிறுவனங்கள் வேலை வழங்க, பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் என்னென்ன திறமைகளை எதிர்பார்க்கின்றன? என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் பொறியியல் துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மேற்படிப்புக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை சவீதா இன்ஜினீயரிங் கல்லூரியுடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

இதில் ‘பொறியியல் படிப்பில் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் பொறியியல் துறை வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கோவை தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்: பொறியியல் படிப்பில் முன்பு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய பாடப்பிரிவுகள் முதன்மைபாடங்களாக இருந்தன. அதன்பின்னர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முதலிய பாடங்கள்இணைந்தன. தற்போது பொறியியலில் ஏராளமான புதிய பாடப்பிரிவுகள் வந்துள்ளன.

இன்றைய வேலைவாய்ப்பு சூழலில் பொறியியலில் பல்துறை நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போது இண்டஸ்ட்ரி 4.0 எனப்படும் 4-ம் நிலை தொழில்புரட்சி பிரபலமாகி வருகிறது. பொறியியலில் பல்துறை அறிவு கொண்டவர்களை இத்துறை அதிகம் எதிர்பார்க்கிறது. அந்த வகையில், ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயர்கள், எலெக்ட்ரானிக்ஸ் துறை அறிந்த மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள் என பொறியியலை ஒருங்கிணைந்து படித்தவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகும்.

பொறியியல் அல்லாத துறைகளிலும்...

தற்போது தொழில்துறையில் ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இன்ஜினீயர்கள், தான் சார்ந்த பாடப்பிரிவில் மட்டுமின்றி பொறியியலின் மற்ற துறைகள் மட்டுல்லாமல் விற்பனை, நிதி, திட்டமிடல், மனிதவள மேலாண்மை உள்ளிட்ட பொறியியல் அல்லாத துறைகளிலும் விஷயம் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதற்கான வாய்ப்புகளும்இப்போது அதிகமாக உருவாகி வருகின்றன.

ரெகுலர் படிப்பில் மட்டுமின்றி சிறப்புபடிப்புகளாகவும், ஆன்லைன் படிப்புகளாகவும் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவில் தற்போது மருத்துவ உபகரணங்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இவற்றை ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இந்தியா உருவாகும். எனவே பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் மிகுதியாக இருக்கும்.

சென்னை சின்புரோசாஃப்ட் தலைமை செயல் அலுவலர் டாக்டர் பத்ரி சேஷாத்ரி:நான் 1987-ம் ஆண்டு சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். அப்போது அங்கு வழங்கப்பட்ட கெமிக்கல் இன்ஜினீயரிங், மெட்டலர்ஜி (உலோகவியல்), ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற படிப்புகள் எனக்கு புதுமையாக தோன்றின. காரணம் பொறியியல் என்றதும் அனைவருக்கும் சிவில் மெக்கானிக்கல், எலெட்ரிக்கல் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகள்தான் தெரியும்.

எனது மேற்படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அப்போது மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள் மருத்துவமனைகளில் பணியாற்றுவது எனக்கு மிகவும்ஆச்சரியமாக இருந்தது. இன்று பிரபலமாகியுள்ள பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் துறையில் மருத்துவர்களும், இன்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

பிஎப்எஸ்ஐ என்று அழைக்கப்படும். வங்கி, நிதிச்சேவை, காப்பீடு குறித்தும்,உற்பத்தி உட்பட அனைத்து துறைகளைஇன்ஜினீயர்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் தொழில்நிறுவனங்கள் தற்போது எதிர்பார்க்கின்றன.

தற்போது எலெக்ட்ரிக்கல் கார் பிரபலமாகி வருகிறது. எனவே, மெக்கானிக்கல் இன்ஜினீயர்களுக்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் குறித்தும் தெரிந்தால்தான் இந்தத் துறையில் நீடிக்க முடியும்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் முதல் ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களையும், 2, 3-ம் ஆண்டுகளில் குறிப்பிட்ட பொறியியல் பிரிவு தொடர்பானவற்றையும் படிக்கிறார்கள். இறுதி ஆண்டில் பெரும்பாலும் புராஜெக்ட்டில் ஈடுபடுகிறார்கள். மாணவர்கள் இன்றைய சூழலுக்கு ஏற்ப கூடுதல் பொறியியல் பாடங்களை எப்படி படிக்க முடியும்? என்ற கேள்வி எழலாம்.

அதற்கு அருமையான வாய்ப்புகளை வழங்குவது விருப்ப பாடத் தேர்வுமுறை (Choice based credit system-CBCS). தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இம்முறை வந்துவிட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் பொறியியல் சம்பந்தப்பட்ட பாடங்களை மட்டுமின்றி பொருளாதாரம், உளவியல், கலை தொடர்பான பாடங்களையும் தேர்வுசெய்து கொள்ளலாம் என்பதுதான்.

கண்டுபிடிப்புத் திறன் முக்கியம்

எந்த பொறியியல் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் ஆனாலும் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் போன்ற பிரத்யேக பாடங்களையும் படிக்க வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் நோய் கண்டறிவது, மருந்து உற்பத்தி, சிகிச்சை அளிப்பது என அனைத்து நிலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவில், மெக்கானிக்கல் படிப்பவர்கள் தாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், சாஃப்ட்வேர் குறித்து படிக்கவேண்டியதில்லை என்று எண்ணக்கூடாது. எந்த பொறியியல் பாடப்பிரிவுபடித்தாலும் மாணவர்கள் கண்டுபிடிப்புத் திறன் (Innovation) உடையவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வை தவறவிட்டவர்கள் https://bit.ly/2HcOtwO என்ற யுடியூப் லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x