Published : 20 Oct 2020 07:07 AM
Last Updated : 20 Oct 2020 07:07 AM

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிரான டாக்டர்களின் போராட்டம் என்னை ஈர்த்தது: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர் பேட்டி

மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப், நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

இதுதொடர்பாக சோயப் கூறியதாவது:

நான் நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலுள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மையத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயந்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு பஸ்களில் பயணமாயினர். ஆனால் நான் பயப்படவில்லை. அங்கிருந்த இந்திய மருத்துவர்களின் சேவை என்னை வெகுவாக ஈர்த்தது. அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு எனக்குப் பிடித்திருந்தது.

கரோனா வைரஸுக்கு எதிராக இந்திய மருத்துவர்களின் போராட்டம் சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். நானும் அவர்களைப் போலவே செயல்பட விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு உத்வேகமாக இருக்கிறார்கள். தொற்று நோய்க்கு எதிராக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் சிறப்பானவை. பல வளர்ந்த நாடுகளை விட இந்தியா, இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு சோயப் கூறினார்.

சோயப் அப்தாப்பைப் போலவே கோட்டா பயிற்சி மையத்தில் படித்த சிலர் மட்டுமே, கரோனாவுக்கு பயந்து சொந்த ஊர்களுக்குச் செல்லவில்லை. அவ்வாறு படித்த ஹரியாணாவைச் சேர்ந்த சாத்விக் கோடாரா கூறும்போது, “நான் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்துள்ளேன்.

என்னுடைய பெற்றோரும் டாக்டர்களே. அவர்கள் கொடுத்த உத்வேகத்தின் பேரில்தான் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். கரோனா வைரஸ் பிரச்சினையின் போது அவர்கள் வெளியில் சென்று தங்களது பணியில் ஈடுபட்டதை நான் பார்த்துள்ளேன். இது மிகப்பெரிய சாதனை. அதனால் நான் உத்வேகம் பெற்றேன். கடுமையான முயற்சி செய்து படித்தேன். தற்போது நீட் தேர்வு முடிவுகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன” என்றார்.

அகில இந்திய அளவில் 9-வது இடம் பிடித்த கர்நாடகாவைச் சேர்ந்த கார்த்திக் ரெட்டி கூறும்போது, “பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்தான் நீட் தேர்வில் அதிக ரேங்க் பெற முடியும் என்று சிறு நகரங்கள், கிராமங்களில் உள்ள மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்பது பிரச்சினை அல்ல. உங்கள் இலக்கை அடைய நீங்கள் எந்தவிதமான கடின முயற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு உத்வேகம் அளித்தனர். நான் படித்த கல்லூரி (கர்நாடகாவில் பிளஸ்-1, பிளஸ்-2 கிடையாது. பியூசி-யை கல்லூரியில் படிக்க வேண்டும்) நிர்வாகமும் எனக்கு உத்வேகம் அளித்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x