Published : 19 Oct 2020 06:53 AM
Last Updated : 19 Oct 2020 06:53 AM

அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பாடத் திட்டத்தை முன்னரே வழங்க வேண்டும்: மாணவர் ஜீவித்குமாருக்கு வழிகாட்டுதல் வழங்கிய முன்னாள் ஆசிரியை கருத்து

சபரிமாலா

மதுரை

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் சாதித்துள்ளார் மாணவர் ஜீவித்குமார்.

இந்த ஆண்டு நடந்த தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜீவித்குமார், 8-ம்வகுப்பு வரை உள்ளூரில் உள்ள அரசு பள்ளியிலும், பிளஸ் 2 வரைபெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். இவரது தந்தை நாராயணசாமி ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். தாயார் மகேஸ்வரி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுகிறார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று ‘நீட்’ தேர்வு அச்சத்தால் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார் ஜீவித்குமார்.

சபரிமாலாவின் வழிகாட்டுதல்

அவரது வெற்றிக்குப் பின்னால் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பின்,தனது அரசு பள்ளி ஆசிரியர் பணியை துறந்து மாணவர் நலனில் வாழ்வை அர்ப்பணித்துள்ள சபரிமாலாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்தான், ஜீவித்குமாருக்கு கடந்த ஓராண்டாக தகுந்த வழிகாட்டுதல் வழங்கி நீட் தேர்வுக்கு தயார் செய்துள்ளார்.

இதுகுறித்து சபரிமாலா கூறிய தாவது:

அனிதாவின் மரணத்துக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 7 லட்சம் மாணவர்களைச் சந்தித்தேன். அப்போதுதான் தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் அருள்முருகன் என்பவர், ஜீவித்குமாரை பற்றி என்னிடம் தெரிவித்தார்.

படிப்பில் சிறந்த மாணவரான ஜீவித்குமார் 2019-ல் நடந்த நீட் தேர்வில் உரிய பயிற்சியும், வழிகாட்டுதலும் இல்லாமல் தோல்வியடைந்திருந்தார். அவருக்கு ஊக்கமளித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தேன். அவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் காட்வின் என்பவர் நிதி உதவி அளித்தார்.

நீட் தேர்வை நான் எதிர்க்கிறேன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம், நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்போது, அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை ஜீவித்குமார் வெற்றி மூலம் உணர்த்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் தகுதியான அரசு பள்ளி மாணவர்களை நீட் தேர்வில் வெற்றிபெற வைக்க சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

மாணவர்களைத் தாண்டி ஆசிரியர்களுக்குச் சிலவற்றைச் சொல்லஆசைப்படுகிறேன். நீட் தேர்வுக்காக மட்டும் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு ஆசிரியராவது தன்னம்பிக்கையை, எழுச்சியை, தைரியத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தால் இது நடந்திருக்காதே.

மாணவர்கள் மீது ஆசிரியர்கள் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள, அதற்கான பாடத்திட்டத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். என்சிஇஆர்டி உயிரியல் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசு பள்ளியிலும் நீட் தேர்வு பயிற்சி மையங்களை உருவாக்கி அதற்குத் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நீட் தேர்வு வெற்றி எட்டாக்கனியல்ல’

மாணவர் ஜீவித்குமார் கூறும்போது, ‘‘ஆரம்பத்தில் மருத்துவராகும் எண்ணம் எனக்கு இல்லை. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்வதைப் பார்த்ததும், இந்த தேர்வை ஒரு சவாலாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் எனக்குள் ஏற்பட்டது.

நீட் தேர்வில் வெற்றி பெறுவது ஒன்றும் எட்டாக்கனியல்ல. இதுவும் மற்ற தேர்வுகளைப்போல் ஒரு சாதாரண தேர்வு என்பதைஉணர்த்த விரும்பினேன். இந்த தேர்வு மட்டுமில்லை, எந்தத் தேர்வாகஇருந்தாலும் அதற்கான வழிகாட்டுதலையும், முறையான பயிற்சியையும் கொடுத்தால் வெற்றி எளிது. நான் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துப் படித்தேன். கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. இஷ்டப்பட்டு படித்தால்தான் வெற்றிபெற முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x