Last Updated : 18 Oct, 2020 04:04 PM

 

Published : 18 Oct 2020 04:04 PM
Last Updated : 18 Oct 2020 04:04 PM

நீட் தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பெற்ற காரைக்கால் மாணவர் 

நீட் தேர்வில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் எம்.சிபிஷா புதுச்சேரி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

காரைக்கால் தலத்தெரு பகுதியில் வசிக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி புரோகிராமராக பணியாற்றி வரும் எஸ்.மானஷா - சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பணியாற்றி வரும் கலைச்செல்வி தம்பதியரின் மகன் சிபிஷா.காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார். பிளஸ் 2 பொதுதேர்வில் (சிபிஎஸ்இ) 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

தற்போது நீட் தேர்வில் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 105-வது இடமும், புதுச்சேரி மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே பல்வேறு போட்டிகளிலும், சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இன்று (அக்.18) மாணவர் எம்.சிபிஷா கூறுகையில், "தேசிய அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை சார்பில் அந்நாட்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். இந்திய அறிவியல் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் 159-வது இடம் பெற்றேன்.

பிளஸ் 1 படிக்கத் தொடங்கியது முதலே நீட் தேர்வுக்கும் படித்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சி பெற்று வந்தேன். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். முதல் முயற்சியிலேயே 700 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x