Published : 16 Oct 2020 06:06 PM
Last Updated : 16 Oct 2020 06:06 PM

கரோனா காலத்தில் புத்தகம் எழுதிய 12-ம் வகுப்பு மாணவி: இரண்டாவது நூல் வெளியானது

மாணவி சிவலெட்சுமி

நாகர்கோவில் அ.சி.சி அரங்கம் களைகட்டி இருந்தது. அங்கு நடந்த கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு யுவதிகள் அதிக அளவில் வந்திருந்தனர். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சிவலெட்சுமி, 12-ம் வகுப்பு மாணவி!

கரோனா காலத்தில் பள்ளி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் போக மிச்சமிருக்கும் நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி கவிதைப் புத்தகம் தீட்டியிருக்கிறார் இந்த மாணவி. 'அலைமோதிய வார்த்தைகள்' என்னும் தலைப்பில் இவரது கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.

நாகர்கோவில் தெற்கு எழுத்தாளர் இயக்கத்தின் சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அந்த அமைப்பின் தலைவர் திருத்தமிழ் தேவனார், மாணவி சிவலெட்சுமியை அறிமுகம் செய்து பேசினார். அப்போது, ''பத்தாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்த சிவலெட்சுமி, இப்போது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இது இவரது இரண்டாவது நூல். கஷ்டப்பட்டு உழைத்தால் எந்தப் பொருளாதார சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த மாணவி ஒரு முன்னுதாரணம்'' எனப் பேச ஆமாம்... என்பதைப் போல் தலையசைக்கிறது கூட்டம்.

வடக்குத் தாமரைக்குளத்தைச் சேர்ந்த சிவலெட்சுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர். தொடர்ந்து வரலாற்றுப் பாடப்பிரிவை எடுத்து பிளஸ் 2 பயின்று வருகிறார்.

குடும்பச் சூழலால் தன் அத்தை துளசி வீட்டில் வளர்ந்து வரும் சிவலெட்சுமி 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''இந்தக் கரோனா காலத்தில் படிப்பு போக அதிக நேரம் கிடைத்தது. தினசரி பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுவரும் நேரமே மிச்சம்தானே? பாடத்தைப் படித்து முடித்தாலும் அதிக நேரம் கிடைத்தது. அந்தப் பொழுதுகளை தொலைக்காட்சிப் பெட்டிக்குக் காவுகொடுக்க விரும்பவில்லை.

கரோனா விடுமுறையைப் பயன்படுத்தி 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்தேன். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன். இது எனது இரண்டாவது தொகுப்பு. இந்தக் கரோனா காலத்தில் மூன்றாவது கவிதைத் தொகுப்பையும் முக்கால்வாசி முடித்துவிட்டேன்.

நூல் வெளியீட்டு விழா

இன்று வெளியிட்டிருக்கும் படைப்பு சமூக நோக்கில் எழுதப்பட்ட கவிதைகள் ஆகும். இதில் கல்வி, வரதட்சணை, முதியோர் இல்லம் ஆகியவை பற்றியும் எழுதியிருக்கிறேன். நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, நான் படித்த அரசுப் பள்ளியில் ஆய்வுக்காக பள்ளி துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது நான் எழுதிய கவிதைகளை வாங்கிப் பார்த்தவர், எனது தமிழ் ஆசிரியை ஜூடி சுந்தரிடம் இந்தக் குழந்தையிடம் திறமை இருக்கிறது என அடையாளம் காட்டினார்.

ஜூடி மேடம் ‘கடலம்மா’ என்னும் பெயரில் ஏற்கெனவே நிறைய படைப்புகளை எழுதியிருக்கிறார். ஜூடி மேடத்தின் ஊக்குவிப்பு, வழிகாட்டுதலில் எட்டாவது வகுப்பிலேயே என் முதல் புத்தகம் வெளிவந்தது. இந்தக் கரோனா காலம் எழுதுவதற்கு அதிக நேரத்தை உருவாக்கித் தந்தது. மாவட்ட அளவில் நடந்த பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்று இருக்கிறேன். ஐஏஎஸ் ஆவதுதான் லட்சியம். அப்போதும் கவிதை எழுதுவதைத் தொடர்வேன்'' என்றார்.

''பஞ்சுபோன்ற பகல் நிலவே
உன்னை யார் உதிர்த்துவிட்டார்?
உருவப் பூக்களாய் வானிலே!''

என மேகத்தைக் குறித்து எழுதியிருக்கும் சிவலெட்சுமியின் கவிதைகளில் இயற்கையின் மீதான சினேகம் ஆழமாக வெளிப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x