Published : 16 Oct 2020 05:50 PM
Last Updated : 16 Oct 2020 05:50 PM

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின: அறிவிப்பு வெளியானதும் முடங்கிய இணையதளம்

2020 நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே தேசியத் தேர்வுகள் முகமை இணையதளம் முடங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு, கரோனா பரவலால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதியில் பலத்த எதிர்ப்புக்கிடையே செப்.13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாதவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, அக்.14-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று (அக்.16-ம் தேதி) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண் ஆகியவை அடங்கிய பெட்டி தோன்றியது.

எனினும் ஏராளமான மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஒரே நேரத்தில் இணையதளத்தைப் பார்க்க முயன்றதால், இணையதளம் முடங்கியது. ஆனாலும், உரிய நேர இடைவெளியுடன் மாணவர்கள் தங்கள் முடிவுகளை இத்தளத்தில் பார்க்கலாம்.

முன்னதாக, அக்.10-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி, உச்ச நீதிமன்ற உத்தரவால் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x