Published : 15 Oct 2020 05:04 PM
Last Updated : 15 Oct 2020 05:04 PM

சிக்னல் கிடைக்காததால் குடிநீர்த் தொட்டிகள், மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள்: மதுரை அருகே ஆபத்தை உணராமல் விபரீதம் 

மதுரை

மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் செல்போன் டவர்கள் இல்லாததால் கிராமங்களில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படிப்பதற்காக ஆபத்தை உணராமல் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளிலும், மரங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு ஆரம்பித்தது முதல் மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறங்களைத் தவிர கிராமங்களில் செல்போன் சிக்னல் அறவே கிடைப்பதில்லை. அதனால், மக்கள் வீட்டு மொட்டை மாடிகளில், மரங்களில் ஏறி செல்போன்களில் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. சிக்னல் கிடைத்தாலும் சரியாகப் பேசவோ, கேட்கவோ முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். கரோனா பாதிப்பால் குறைந்த ஊழியர்களுடன் செல்போன் நிறுவனங்கள் செயல்படுவதால் அவர்களால் தற்போது வரை புறநகர், கிராமங்களில் செல்போன் டவர் சிக்னல் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை. தற்போது வரை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக சேவையை வழங்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பள்ளிக் குழந்கைளுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கின்றனர். சில பள்ளிகளில் ஆசியர்கள், அவர்கள் நடத்தும் பாடங்களை வீடியோவாகத் தயார் செய்து அனுப்புகின்றனர். சில பள்ளிகளில், ஜூம் செயலி மற்றும் டீம்ஸ் செயலி போன்றவற்றில் நேரலையாக வகுப்புகள் நடத்துகின்றனர். அப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஓட விட்டு, புத்தங்களை பிடிஎஃப் பைலாக அனுப்பி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். அதேபோல் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடக்கின்றன. அதனால், பள்ளிக் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு செல்போனும், இணையமும் அவசியம் தேவைப்படுகிறது. பெற்றோர்கள் சிரமப்பட்டு செல்போன் வாங்கிக் கொடுத்தாலும், மதுரை புறநகர் கிராமக் குழந்தைகள், சிக்னல் போதியளவு கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் அருகே காடுப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கிராமங்களில் செல்போன் டவர்கள் போதுமான அளவு இல்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் சிக்னல் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏறபட்டுள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடிச் செல்கின்றனர்.

பல மாணவ, மாணவிகள், ஆபத்தை உணவராமல் தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மரங்கள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் வீட்டு மொட்டைகளிலும் ஏறி பாடங்களை கவனிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மாணவர்கள் கூறுகையில், ''ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காவிட்டால் ஆசிரியர்கள் ஆப்சென்ட் போடுகின்றனர். பங்கேற்க முடியாவிட்டால் முந்தைய நாள் வகுப்புகளை மறுநாள் எடுப்பதில்லை. முன்புபோல் உடன் படிக்கும் மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடியாததால் கேட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், சிக்னல் கிடைக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டிய உள்ளது. எங்கள் ஊர்ப் பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்கச்செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x