Published : 15 Oct 2020 11:30 AM
Last Updated : 15 Oct 2020 11:30 AM

கரூர் மாணவர்கள் வடிவமைத்த மிகச்சிறிய செயற்கைக்கோள் - ‘நாசா’ மூலம் விண்ணில் ஏவுவதற்கு தேர்வு

கரூர்

கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த உலகின் மிகச்சிறிய, மிகக்குறைந்த எடை கொண்ட ‘இண்டியன்சாட்’ என்ற செயற்கைக்கோள் நாசா மூலம் விண்ணில் ஏவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாணவர்களின் தனித்திறன் கல்வியை ஊக்குவித்து வரும் ‘ஐடூட்எஜு இன்க்’ (idoodledu inc) என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ என்ற 11 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களின் சிறிய வடிவிலான செயற்கைக்கோள் நாசாவின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும்.

கடந்த 2018-ல் நடைபெற்ற போட்டியில் கரூர் காளியப் பனூரைச் சேர்ந்த மாணவர் அட்னன்(18), கேசவன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், இறுதிப் போட்டியில் இவர்களின் படைப்பு தேர்வாகவில்லை.

இந்நிலையில், தற்போது கல்லூரியில் படித்துவரும் அட்னன், கேசவன் மற்றும் அருண் ஆகிய மூவரும் உலகின் மிகச் சிறிய, குறைந்த எடை கொண்ட ‘இண்டியன்சாட்’ என்ற சோலார் செயற்கைக்கோளை ஓராண்டாக முயன்று உருவாக்கி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். 73 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் படைப்புகளில் இருந்து தேர்வான 80 படைப்புகளில் ‘இண்டியன்சாட்’ மட்டுமே செயற்கைக்கோள். இது, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவிலிருந்து எஸ்ஆர்-7 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதுகுறித்து மாணவர் அட்னன் கூறியது: இன்போர்ஸ்டு கிராபைன் பாலிமர் என்ற பொருளால் செய் யப்பட்ட 3 செ.மீ சுற்றளவு, 64 கிராம் எடையைக் கொண்ட ‘இண்டியன்சாட்’ செயற்கைக்கோள் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் 3.3 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இதில் உள்ள 13 சென்சார்கள் மூலம் தட்பவெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவரங்களை பெற முடியும். மேலும், ராக்கெட்டுக்குள் உள்ள காஸ்மிக் கதிர்களின் தன்மையைப் பற்றி அறிய முடியும். இந்த செயற்கைக்கோளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட் இந்தியா- என்ற அமைப்பு வழிகாட்டியது. இதை செய்து முடிக்க ரூ.1.35 லட்சம் செலவானது. இந்த செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நாசாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி

இதுகுறித்து தகவலறிந்த திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி, கரூர் காளியப்பனூரில் உள்ள அட்னன் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அட்னன், அருண், கேசவன் ஆகிய மூவரையும் சந்தித்து, அவர்களின் கண்டுபிடிப்புக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x