Published : 15 Oct 2020 07:39 AM
Last Updated : 15 Oct 2020 07:39 AM

‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்து துறையிலும் ஆராய்ச்சி வாய்ப்புகள்- இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

மயில்சாமி அண்ணாதுரை

சென்னை

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு அமர்வுகளாக நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி அமர்வில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், என்டிஆர்எஃப் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, ‘பணி வாய்ப்பாகஆராய்ச்சி: வாய்ப்புகளும், வழிமுறைகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

விவசாயம், மருத்துவம், வேதியியல், பொறியியல், ஆற்றல், வானிலையியல், கடல், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சியை முழுநேர பணியாகவும், சுயதொழிலாகவும் மேற்கொள்ள முடியும்.

விண்வெளித் துறையில் ஆராய்ச்சி என்றுபார்க்கும்போது விண்வெளி உள்கட்டமைப்பு, விண்வெளி பயன்பாடு, விண்வெளி போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகள் உள்ளன. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள், மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்கள் தயாரிப்பு, விண்வெளி போக்குவரத்துப்பிரிவின் கீழ் வருகின்றன. செயற்கைக்கோள்கள் விவசாயம், தகவல்தொடர்பு, வானிலை,கடல்சார் ஆராய்ச்சி, கனிம வளம் உள்ளிட்டபல்வேறு நிலைகளில் பயன்படுகின்றன.

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் ராக்கெட்கள், செயற்கைக்கோள்கள் தயாரிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்குத் தேவையான விஞ்ஞானிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது இளைஞர்களுக்கு நல்வாய்ப்பு.

இளம் வயதில் பணியில் சேர்ந்தால் இஸ்ரோவின் தலைமை பதவியை அடையலாம். இஸ்ரோ தலைவர்தான் மத்திய அரசின் விண்வெளித் துறை செயலராக இருப்பார்.ஐஏஎஸ் அதிகாரிகள் உச்ச நிலை பதவியான துறை செயலராக வருவதுபோல், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதற்கு இணையான பதவியை பெற வாய்ப்பு இருக்கிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஜெஇஇஅட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு மூலம் திருவனந்தபுரம் ஐஐஎஸ்டி-யில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) பிடெக் முடித்து நேரடியாக இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேரலாம். மேலும், பிஇ, பிடெக் பட்டதாரிகள் கேட் நுழைவுத்தேர்வு மூலமாக இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக முடியும். அதோடு எம்இ, எம்டெக் கல்வித்தகுதி மற்றும் பிஎச்டி கல்வித்தகுதி மூலமாகவும் இஸ்ரோவில் விஞ்ஞானி பணிவாய்ப்பு பெறலாம்.

இதேபோன்று நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் (டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர், என்ஐஓடி போன்றவை), 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்ஆய்வு நிறுவனங்களும் இருக்கின்றன. மத்திய அரசு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவோருக்கு பல்வேறு பெல்லோஷிப்களையும் வழங்குகிறது. பிஎம்ஆர்எஃப் எனப்படும் பிரைம் மினிஸ்டர் ரிசர்ச் பெல்லோஸ் திட்டத்தில் தேர்வுசெய்யப்படுவோருக்கு ஆய்வுப்பணிக்காக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை 4 ஆண்டுகள் பெறலாம்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஜெர்மனியில் உள்ள பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த அர்ச்சனா மனோகரன், ஜெர்மனி நாட்டில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து பேசினார்.

அவர் கூறும்போது, “ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும் இந்திய மாணவர்கள் ஜெர்மனியில் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஜெர்மனியில் ‘டேட் இந்தியா’ (DAAD India) என்ற கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல், ஒரே முதுகலை பட்டப்படிப்பை இரண்டு தொலைதூர பல்கலைக்கழகங்களில் படிக்கும் வகையில் ‘எராஸ்மஸ்’ (Erasmus) என்ற இன்னொரு கல்வி உதவித்தொகை திட்டமும் உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்று ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கலாம்” என்றார்.

நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x