

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நடக்கும் மாணவர்சேர்க்கை, ஏழை மாணவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் 25% இடங்கள் எப்போதும் நிரம்பாமலேயே உள்ளன.
தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத 8,608 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை சேர்க்க 25% (1.15 லட்சம்) இடங்கள்ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இந்தஇடங்களை தமிழக அரசால் நிரப்ப முடிவதில்லை. சேர்ந்த மாணவர்கள் பலர், தாழ்வு மனப்பான்மையால் அப்பள்ளிகளை விட்டு விலகுவது வாடிக்கையாக உள்ளது. மாணவர்களை சமமாக அரவணைப்பதற்கு பதிலாக உளவியல் ரீதியாக அவர்களை தனிமைப்படுத்தும் சூழலை தனியார் பள்ளிகள் வலிய உருவாக்குகின்றன என்ற புகாரும் இருந்து வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் சிலர் கூறும்போது, ‘‘இச்சட்டத்தால் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிக்கு வரவேண்டிய 1 லட்சம் மாணவர்கள், அரசால், தனியார் பள்ளிகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். இச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் ரூ.400 கோடியை கொண்டுஅரசுப் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்கலாம்’’என்றனர்.
இதுதொடர்பாக கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகளை பெற்றோர் தலையில்கட்டிவிடுவார்கள். மாலையில் இருந்து இரவு வரை குழந்தைகளின் படிப்புக்காக பெற்றோர் மெனக்கெட வேண்டும். புராஜக்ட் செய்முறை பணிகளையும் அவர்களே செய்து தர வேண்டும். எஸ்எம்எஸ் அல்லதுவாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் வரும் தகவல்களை செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் புரிந்துகொண்டு செயல்பட படிப்பறிவு இல்லாத அல்லது குறைந்த படிப்பறிவுள்ள பெற்றோரால் இயலாது.
தனியார் பள்ளிகளில் 3 வகைசீருடைகளுக்கு ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது. நோட்டு, புத்தகங்களுக்கு தனி கட்டணம். அவையும்முழுமையாக பயன்படுத்தப்படாது. ஒரு பள்ளியில், தொடக்க வகுப்பில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த பின்னர், வேறு பள்ளிகளில் சேர்த்தால் இலவச கல்வியை பெறமுடியாது. இதுபோன்ற சிக்கல்களை அறியாமல் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், 1.15 லட்சம் இடங்களை நிரப்பவே முடியாது.
இந்த ஆண்டு இதுவரை 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், கல்வி உரிமைச் சட்ட பலன்கள் கிடைக்காவிட்டாலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்குபொருளாதார பலம் கொண்டவர்கள். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவில் கோடீஸ்வரர் பிள்ளைகளையும் சேர்க்கும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
எனவே, தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய தமிழக அரசுநியமித்துள்ள குழு, கூடவே தனியார்பள்ளியில் ஏழை மாணவர்கள் படிப்பதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் ஆய்வு செய்து, உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.