Published : 10 Oct 2020 07:25 AM
Last Updated : 10 Oct 2020 07:25 AM

மாணவர்கள் கூட்டு முயற்சியால் வாழ்வில் முன்னேற வேண்டும்: விஐடி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் கருத்து

மாணவர்கள் கூட்டு முயற்சியை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விஐடி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 35-வது பட்டமளிப்பு விழா காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், 7 ஆயிரத்து 444 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். 229 பேர் முனைவர் பட்டமும் 55 மாணவர்கள் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை குழுவின்முன்னாள் தலைவருமான டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் சிறப்புரை நிகழ்த்தியபோது, ‘‘மாணவர்கள் தங்களுடைய அறிவாற்றலை விரிவுபடுத்திவளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பணிபுரிய கற்றுக்கொள்ளும்போது கூட்டு முயற்சியின் அனுபவங்களை பெறுவார்கள். நம் முன்னோர் மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதைப் பின்பற்றி மாணவர்களாகிய நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதுடன் கூட்டு முயற்சியை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘ஆகுமென்டெட் ரியாலிட்டி’ என்ற இரண்டு தொழில்நுட்பம் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.இதனால், மனிதனுடைய தொழில் திறமையும்உயர்வகை தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தக்கூடிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் இந்தத் துறைகளின் வேலைகளை கையாளக்கூடிய வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்’’ என்றார்.

பட்டமளிப்பு விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது,‘‘நம் நாடு வளர மாணவர்கள் தங்களால் முயன்ற அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும். விஐடியில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது. இவை, அனைத்தும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விரைவில் சந்தைக்கு வரும்.

தேசிய அளவில் விஐடியில் உள்ள தொழில்நுட்ப வணிக அடைகாப்பகத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பாராட்டியுள்ளது. அந்தளவுக்கு விஐடி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். விஐடிக்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்றார்.

முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் விஐடி துணை வேந்தர் ராம்பாபு வரவேற்றார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், உதவி துணை தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், இணை துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் சத்திய நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x