Published : 05 Oct 2020 04:03 PM
Last Updated : 05 Oct 2020 04:03 PM

ஓலைக் கொட்டகையில் ஸ்மார்ட் கிளாஸ்: கேரள மாணவி அனாமிகாவுக்கு யூத் ஐகான் விருது

கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் 8-ம் வகுப்பு மாணவி அனாமிகாவுக்கு ‘யூத் ஐகான்’ விருதை ‘யுனிவர்சல் ரெக்கார்டு ஃபோரம்’ அமைப்பு அறிவித்துள்ளது.

அட்டப்பாடி ஆனைகட்டி மந்தியம்மன் கோயில் அருகே வசிக்கும் அனாமிகா, திருவனந்தபுரம் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கரோனா பொதுமுடக்கம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி வகுப்பறையில் படிப்பது போன்ற சூழலைத் தன் ஓலைக் கொட்டகை வீட்டிலேயே உருவாக்கி பிற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார். மலையாளம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஜெர்மனி மொழிகளையும் கற்றுக் கொடுக்கிறார். கூலி வேலை செய்துவரும் அவரது பெற்றோரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, ‘7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் 8-ம் வகுப்பு மாணவி: அட்டப்பாடியில் ஆச்சரியம்’ எனும் தலைப்பில் ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் செய்தி வெளியானது. கேரள ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் பரவலானதைத் தொடர்ந்து, அனாமிகாவுக்கு உதவப் பலர் முன் வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘யுனிவர்சல் ரெக்கார்டு ஃபோரம்’ அமைப்பு அவருக்கு ‘யூத் ஐகான்’ விருதை அறிவித்துள்ளது.

“கரோனா நெருக்கடியால் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகளுக்கு, ஆன்லைன் வகுப்புகள்தான் ஒரே வழி என்று கருதப்படுகிறது. இப்படியான சூழலில் மின்சாரம், தொலைபேசி வசதி இல்லாத பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்கு உதவ அனாமிகா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த மகிழ்ச்சியை ‘இந்து தமிழ்’ நிருபரிடம் பகிர்ந்துகொண்ட அனாமிகாவின் தந்தை சுதிர், “இப்படியான விருதுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளின் படிப்பு கெடக்கூடாது என்பதுதான் அனாமிகாவின் ஒரே நோக்கம். கதை போல, விளையாட்டாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதால் குழந்தைகளும் கஷ்டமில்லாமல் கல்வி கற்கின்றனர்.

இந்த விருதைக் கொடுக்கும் அமைப்பு வருடந்தோறும் கின்னஸ் சாதனைக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து அனுப்பக் கூடியதாகும். கரோனா காலமாக இருப்பதால் அவர்கள் நேரில் வந்து கொடுக்க இயலாது. எனினும், கேரளத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மூலம் விருதை வழங்குவதாக இந்த அமைப்பின் தென்னிந்தியப் பொறுப்பாளர் சுனில் ஜோசப் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x