Published : 01 Oct 2020 07:23 AM
Last Updated : 01 Oct 2020 07:23 AM

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த 28-ம் தேதி வெளியிட்டார். மொத்தம் 1 லட்சத்து 12,406 பேர்அடங்கிய தர வரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் மாணவிகளைவிட மாணவர்களே அதிகமாக 7 இடத்தை பிடித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்காக 1 லட்சத்து60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்ததில், 1 லட்சத்து 15,088 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களுடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 1 லட்சத்து 12,406 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71,469 மாணவர்களும் 40,922 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் உள்ளனர்.

நடப்பாண்டில் தனியார் கல்லூரி மேலாண்மை பிரிவில் இருந்து 27,476 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்ற 27 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டில் பங்கேற்கவில்லை. அதேபோல், 8 புதிய கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளன. விண்ணப்பித்தவர்களில் 2,682 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ‘மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும்’ என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (அக். 1-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வில் விளையாட்டு பிரிவில் 1,409 பேர், மாற்றுத் திறனாளி பிரிவில் 148 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 853 பேர் என மொத்தம் 2,410 மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 8-ம் தேதி தொடங்கி 27-ம்தேதி வரை நடக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. ஆனால், 1 லட்சத்து 12,406 மாணவர்களே கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ளனர். இதனால், கலந்தாய்வு தொடங்கும் முன்பே 50 ஆயிரத்து 748 இடங்கள் காலியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x