Published : 30 Sep 2020 04:31 PM
Last Updated : 30 Sep 2020 04:31 PM

3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள்: கேரள மாணவி உலக சாதனை

ஊரடங்கு காலகட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து உலக சாதனை படைத்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஆரத்தி ரகுநாத்.

கேரள மாநிலம் கொச்சி அருகே எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் எம்.எஸ்சி. உயிர் வேதியியல் (இரண்டாம் ஆண்டு) படிப்புப் படித்து வருகிறார். கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் ஆரத்தி, கோர்ஸ் எரா மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார்.

குறிப்பாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வெர்ஜீனியா பல்கலைக்கழகம், நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகம், ரோசெஸ்டர் பல்கலை. உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஆன்லைன் படிப்புகளை ஆரத்தி ரகுநாத் முடித்துள்ளார்.

இதுகுறித்து ஆரத்தி கூறும்போது, ''ஆன்லைனில் பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. இந்த உலகத்தை எனது கல்லூரி ஆசிரியர்கள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு ஆன்லைன் படிப்பும் பாடத்திட்டத்திலும் கால அளவிலும் வேறுபடும். ஆசிரியர்களும் பெற்றோரும் அளித்த ஊக்கத்தால் குறைந்த காலகட்டத்தில் இதை என்னால் சாதிக்க முடிந்தது.

இதை உலக சாதனையாக அங்கீகரித்து, சர்வதேச சாதனை மன்றம் (URF) பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்தார். இவருக்குப் பல்வேறு தரப்பிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x