Last Updated : 29 Sep, 2020 01:35 PM

 

Published : 29 Sep 2020 01:35 PM
Last Updated : 29 Sep 2020 01:35 PM

மொபைல் செயலி வழியாகத் தேர்வு; குறைந்த இணைய வசதியிலும் பயன்படுத்தலாம்: நாக்பூர் பல்கலைக்கழகம் அறிமுகம்

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மொபைல் செயலி வழியாகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. குறைந்த இணைய வசதியிலும் செயலியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக இறுதி ஆண்டுப் பருவத் தேர்வுகளை நடத்தவேண்டும் என யுஜிசி வலியுறுத்தியதன் அடிப்படையில் செப்டம்பருக்குள் தேர்வுகளை முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மொபைல் செயலி வழியாகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 78 ஆயிரம் மாணவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

''தேர்வுகள் அனைத்தும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'RTMNU Pariksha' என்ற செயலி மூலம் நடத்தப்பட உள்ளன. ஆன்லைன் தேர்வில் 50 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதில் 25 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது'' என்று தேர்வுக்குழு இயக்குநர் பிரஃபுல்லா சபாலே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து நாக்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுபாஷ் சவுத்ரி கூறும்போது, ''1,852 ஆசிரியர்கள் வெவ்வேறு பாடங்களில் இருந்து சுமார் 1.82 லட்சம் கேள்விகளை அமைத்துள்ளனர். முதல் முறையாக மொபைல் செயலி வழியாகத் தேர்வு நடைபெற உள்ளது. இணைய வசதி குறைவாக இருக்கும் இடங்களிலும் இந்தச் செயலி வேலை செய்யும். ஊரகப் பகுதிகளில் இந்தச் செயலியைப் பரிசோதித்துப் பார்த்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x