Published : 28 Sep 2020 20:14 pm

Updated : 28 Sep 2020 20:14 pm

 

Published : 28 Sep 2020 08:14 PM
Last Updated : 28 Sep 2020 08:14 PM

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

rankings-for-engineering-courses-published-by-minister-anbalagan

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இன்று (செப்.28) வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுக் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் 1,12,406 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களோடு மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலை வாசித்தார்.

மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலமாகத் தங்களின் தரவரிசையை அறிந்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள், 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், செப்.17, 25, 28 என தரவரிசைப் பட்டியல் வெளியீடு 3 முறை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

பொறியியல் படிப்புதரவரிசைப் பட்டியல்அமைச்சர் அன்பழகன்Engineering CourseEngineeringபொறியியல்அண்ணா பல்கலைக்கழகம்கே.பி.அன்பழகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author