Published : 27 Sep 2020 07:05 AM
Last Updated : 27 Sep 2020 07:05 AM

‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: சமூக தேவையை நிறைவேற்ற மருத்துவ ஆராய்ச்சியில் எண்ணற்ற வாய்ப்புகள்- மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுரை

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (என்டிஆர்எப்), FIIT-JEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ என்ற பொறியியல், மருத்துவத்துறை குறித்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியின் 2-வது அமர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைபேராசிரியர் டாக்டர் சக்திராஜன், ‘நவீன மருத்துவத்தில் ஆராய்ச்சி - ஒரு விருப்பம் அல்ல, அவசியத் தேவை’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

சமூகத்தின் தேவை என்ன என்பதுஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்த வகை மருத்துவ ஆராய்ச்சியில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தொழில்சார்ந்த நோய்கள் ஆகிய 3 வகையான நோய்களில் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் சமூக மருத்துவத் துறை, நுண்ணுயிரியல் துறை, மரபணு துறை, மருந்தியல் துறை என பல்வேறு துறை நிபுணர்கள் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கரோனா பரவத் தொடங்கியதும் அது எங்கிருந்து வந்தது, எப்படி பரவுகிறது, உடலின் எந்தப் பகுதியை பாதிக்கிறது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன என அனைத்துப் பணிகளும் மிகக்குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பின்னால் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் உள்ளனர்.

தற்போது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால்பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு மரபுரீதியான காரணிகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டறிய வேண்டியுள்ளது. எனவே, இந்த துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல், மருத்துவத் துறையுடன் இணைந்த பயோ-டெக்னாலஜி, நானோ-டெக்னாலஜி ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு டாக்டர் சக்திராஜன் கூறினார்.

தொடர்ந்து, கோவை பிஎஸ்ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன், மருத்துவ படிப்புகள் குறித்து உரையாற்றினார். அவர் பேசும்போது, "மாணவர்கள் 9, 10-ம் வகுப்புபடிக்கும்போதே தங்கள் எதிர்காலஇலக்கை தீர்மானித்துவிட வேண்டும். அதற்கேற்ப மேற்படிப்பை தேர்வு செய்துகொள்ளலாம். மருத்துவ படிப்பைப் பொருத்தவரையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மட்டுமின்றி பார்மசி, பிசியோதெரபி, நர்சிங், ஓமியோபதி, ஆயுர்வேதா உள்ளிட்ட இதர மருத்துவ படிப்புகளும், மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளும் உள்ளன" என்று குறிப்பிட்டார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ சர்க்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

இன்றைய நிகழ்வில், கான்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இயந்திரவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜெ.ராம்குமார், ‘ஐஐடி; கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.

இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வை காணத் தவறியவர்கள் https://bit.ly/2HBVgQR என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x