தேர்வு முடிவுகளில் தாமதம் ஏற்பட்டால் நவ.18 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு

தேர்வு முடிவுகளில் தாமதம் ஏற்பட்டால் நவ.18 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு
Updated on
1 min read

12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், நவ.18 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை நடத்தலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக 6 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே யுஜிசி, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ''மாணவர் சேர்க்கைக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

ஒருவேளை 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், பல்கலைக்கழகங்கள் நவ.18 முதல் முதலாமாண்டு வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எனினும் அதுவரை கற்பித்தல் முறைகள் வழக்கம்போல ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் நடைபெற வேண்டும்'' என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

முன்னதாக, ''மார்ச் 8 முதல் 26-ம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும். ஏப்ரல் 5-ம் தேதி அடுத்த செமஸ்டர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 9 முதல் 21-ம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in