Last Updated : 23 Sep, 2020 07:03 PM

 

Published : 23 Sep 2020 07:03 PM
Last Updated : 23 Sep 2020 07:03 PM

ஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள் வெளியீடு

ஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் மருத்துவம் சார் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 67.5 சதவீதம் பேரே பங்கேற்ற நிலையில், தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதிக்குள் வெளியாகும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது இக்கல்வியாண்டில் நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் 150, காரைக்காலில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதம் தரப்படுவதால் இடங்களும் உயர்ந்துள்ளன. அதன்படி, இக்கல்வியாண்டில் 49 இடங்கள் உயர்த்தப்பட உள்ளன. தற்காலிகத் தேர்வு அட்டவணையில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 என ஜிப்மர் குறிப்பிட்டுள்ளது.

தற்போது பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிபீடிஎன், பிஜிஎஃப், பிஜிடி படிப்புகளுக்குக் கடந்த 22-ம் தேதி மதியம் 2 முதல் 3.30 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம் 21 நகரங்களில் 37 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு மொத்தம் 6,003 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 4,051 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதனால் தேர்வு எழுதியோர் சதவீதம் 67.5 ஆகக் குறைந்தது.

இத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பட்டியல் செப்டம்பர் 29-ம் தேதிக்குள் வெளியிடப்படும். கலந்தாய்வு செப்.30-ல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கும். முடிவுகளை ஜிப்மர் இணையத்தில் அறியலாம்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 94 பிஎஸ்சி செவிலியர் மற்றும் 87 மருத்துவம் சார்ந்த படிப்புகள் என மொத்தம் 181 இடங்கள் உள்ளன. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மயக்க மருந்துத் தொழில்நுட்பம், இதய ஆய்வகத் தொழில்நுட்பம், டயாலிசிஸ், ரத்த வங்கியில் எம்.எல்.டி, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், கதிரியக்க சிகிச்சைத் தொழில்நுட்பம் என 11 படிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x