Published : 22 Sep 2020 07:17 AM
Last Updated : 22 Sep 2020 07:17 AM

‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ சி.ஏ. உள்ளிட்ட வணிகவியல் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்

சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆகிய வணிகவியல் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்குஉயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித் தனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டிநிகழ்ச்சியை கடந்த 20-ம் தேதி நடத்தியது. இதில் சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்புகள் குறித்து வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

வேல்யூவேஷன் ஸ்டாண்டர்ட்ஸ் போர்டு தலைவரும், சென்னை கே.கோபால்ராவ் ஆடிட்டிங் நிறுவன பங்குதாரருமான கோபால் கிருஷ்ண ராஜு:

பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம் என்பது அனைத்து மாணவர்களின் மனதில் எழும் முக்கிய கேள்வி. அவர்களுக்கு சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆகிய வணிகவியல் சார்ந்த படிப்புகள் வரப்பிரசாதமாக கருதப்படுகின்றன. சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் சி.ஏ. படிப்பில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம். இதில் முதல்நிலையான ஃபவுண்டேஷன் படிப்புக்கு ஆண்டுக்கு2 தடவையும் (ஜூன், டிசம்பர்), கம்பெனிசெகரட்டரிஷிப் எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (CSEET) ஆண்டுக்கு 4 தடவையும் (ஜனவரி, மே, ஜூலை, நவம்பர்) நடத்தப்படுகின்றன. கம்பெனி செகரட்டரிஷிப் எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் தேர்வை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எழுதலாம். சி.ஏ. ஃபவுண்டேஷன் தேர்வில் மொத்தம் உள்ள 4 தாள்களில் 2 தாள்கள் அப்ஜெக்டிவ் முறையிலும், மற்ற 2 தாள்கள் விரிவாக விடையளிப்பதாகவும் இருக்கும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும்வரை காத்திருக்க தேவை இல்லை.

தேர்வு முடிந்த உடனேயே ஃபவுண்டேஷன் தேர்வுக்கு மாணவர்கள் பதிவுசெய்துவிடலாம். சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வுகள் கடினமானவை என்றாலும், கஷ்டப்பட்டு படித்தால் வெற்றிபெற முடியும். ஒரே குறிக்கோளுடன் பாடங்களை விரும்பிப் படிக்க வேண்டும். அதிக பாடங்கள் இருக்கிறதே என்று மலைத்துவிடக் கூடாது. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நண்பர்கள் கூட்டுசேர்ந்து படித்தால், பயனுள்ளதாக இருக்கும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் உடனடியாக பதிவு செய்துவிட்டு சேர்ந்தால் 4 ஆண்டுகளில், அதாவது 22 வயதிலேயே சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், கம்பெனி செக்ரட்டரி ஆகிவிட முடியும்.

இவை எல்லாம் மிகவும் கஷ்டமான படிப்புகள் என்று பொதுவாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், உறுதியான இலக்கு, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த வணிகவியல் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்பதுதான் நடைமுறை உண்மை.

மதுரை சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் உமா கிருஷ்ணா:

சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப் ஆகியவை சற்று கடினமான படிப்புகள்தான். சிறு சிறு தோல்விகளும் வரலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. பிளஸ் 2-வில் எந்தகுரூப் படித்திருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் இந்த படிப்புகளில் சேரலாம். வயது வரம்பு, கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

நான் ஆங்கில ஆசிரியையாக 14 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது 45 வயதில்தான் சி.ஏ. படிப்பில் சேர்ந்தேன். மருத்துவம், பொறியியல் போன்று சி.ஏ. படிப்பும் தொழில்முறை படிப்புதான். ஆனால் அந்த படிப்புகளுக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது சி.ஏ. படிப்புக்கான கட்டணம் மிக மிக குறைவு. ஃபவுண்டேஷன், இன்டர், ஃபைனல் ஆகிய 3 நிலைகளுக்கும் சேர்த்தே மொத்தமாக ரூ.80 ஆயிரம் அல்லது ரூ.1 லட்சம்தான் செலவு ஆகும். அதுவும்ஒரே நேரத்தில் செலவு செய்யவேண்டி இருக்காது. சி.ஏ. முடித்தால் சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். இன்னொரு புறம், நல்ல வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் உண்டு. தவிர, பெண்களுக்கு இது அருமையான படிப்பு. சி.ஏ. படித்தவர்களுக்கு வங்கிகள், பெரிய நிறுவனங்களில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. 134 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 3.50 லட்சம் சி.ஏ.க்கள்தான் உள்ளனர். தேவை அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்பட அவசியம் இல்லை. இது ஒரு கடினமான படிப்புதான். ஆனால், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டி இருப்பதால், பலர் கூட்டுசேர்ந்து படித்தால் சலிப்பு ஏற்படாது.

பட்டப் படிப்பு முடித்துவிட்டுதான் சி.ஏ. படிக்க வேண்டும் என்பது இல்லை.பிளஸ் 2 முடித்துவிட்டு நேரடியாக சேர்ந்துவிடலாம். சி.ஏ. இன்டர் தேர்ச்சி பெற்றவர்களுக்காக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) சிறப்பு பி.காம். படிப்பை நடத்துகிறது. இதில் 4 அல்லது 6 தாள்கள்எழுதினால் பி.காம். பட்டம் பெற்றுவிடலாம். இதே வசதியை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் வழங்குகிறது.

சென்னை கிருஷ்ணன் அண்ட் செட்டியப்பன் ஆடிட்டிங் நிறுவன உதவி மேலாளர் (தணிக்கை) சத்யநாராயணன்:

சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆகிய மூன்றும்கிட்டத்தட்ட ஒரேமாதிரியான படிப்புகள்தான். கடினமாக தோன்றினாலும் தன்னம்பிக்கை, தைரியம், கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றுக்கொள்ளும் ஆர்வம்இருந்தால் இதில் சாதிக்க முடியும்.

சி.ஏ. படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. வங்கிகளில் வேலைவாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனம் ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்காரணமாக, சி.ஏ. படித்தவர்களுக்கு அந்த நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. சி.ஏ. முடிப்பவர்களுக்கு நடத்தப்படும் வளாக நேர்காணலிலேயே (கேம்பஸ் இன்டர்வியூ) தொடக்க நிலை சம்பளமாக ரூ.6 லட்சம்முதல் ரூ.18 லட்சம் வரை கிடைக்கிறது. கணக்கு தணிக்கையாளராக மட்டுமின்றி, பதிவுபெற்ற மதிப்பீட்டாளர் உட்பட பல்வேறு இதர வேலைவாய்ப்புகளும் உள்ளன. தேசிய அளவில் மூன்றரை லட்சம் சி.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, சி.ஏ. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகளவில் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவர்கள், பெற்றோரின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) இணைந்து நடத்தின.

இதில் பங்கேற்க தவறியவர்கள் https://youtu.be/zuadpCo3_x8 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x