Last Updated : 22 Sep, 2020 07:08 AM

 

Published : 22 Sep 2020 07:08 AM
Last Updated : 22 Sep 2020 07:08 AM

நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும்: கல்வியாளர்கள் கருத்து

நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் நடப்பு ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப்சராசரியாக 60 முதல் 70 மதிப்பெண்வரை உயரக் கூடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தேசியதேர்வு முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடப்புஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப், 70 மதிப்பெண் வரைஉயரும் என தெரிகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு நீட் தேர்வு எளிதாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு மறுமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். இவை கட்-ஆப் மதிப்பெண்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட்தேர்வில் மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600-க்கு மேல் 143 பேரும், 550-க்கு மேல் 521 பேரும், 500-க்கு மேல் 1,383 பேரும் எடுத்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். அதாவது, 600-க்கு மேல் 250-க்கு மேற்பட்டோரும், 550-க்கு மேல் 700-க்கு மேற்பட்டோரும், 500-க்கு மேல் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் மதிப்பெண் பெறக் கூடும்.

தமிழகத்தில் தற்போதுள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தவே இந்திய மருத்துவக் குழுமம் (எம்சிஐ) அனுமதித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆராய்ந்தால் இந்த ஆண்டு கலந்தாய்வில் சராசரியாக 60 முதல் 70 வரை கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஓசி பிரிவுக்கு 590-க்கு மேலும், பிசி வகுப்புக்கு 540-550 வரையும், பிசி (முஸ்லிம்) பிரிவுக்கு 520-525,எம்பிசிக்கு 500-க்கும் கூடுதலாகவும், எஸ்சி வகுப்புக்கு 435-440, எஸ்டி பிரிவுக்கு 330-340 வரையும் கட்-ஆப் அமையும்.

அதேநேரம் தமிழக அரசு புதிதாகதொடங்கியுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்சிஐ அனுமதி வழங்கிவிட்டால் நமக்கு கூடுதலாக 1,250 இடங்கள் கிடைக்கும். அவை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டால் கட்-ஆப் 30 முதல் 40 மதிப்பெண் வரை மட்டுமே உயரும். ஓசி வகுப்புக்கு 550-560 வரையும், பிசி பிரிவுக்கு 500-510, பிசி (முஸ்லீம்) வகுப்புக்கு 490-500, எம்பிசிக்கு 465-475, எஸ்சி பிரிவுக்கு 390-400 மற்றும் எஸ்டி வகுப்புக்கு 300-310 மதிப்பெண் என்ற விகிதத்தில் கட்-ஆப் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக் கல்வி இயக்குநரகஅதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘நடப்பு ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கேற்ப கட்-ஆப் மதிப்பெண்ணும் கணிசமாக உயரும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் எம்சிஐ நேரில் ஆய்வு செய்த பின்னரே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைக் கும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x