Published : 20 Sep 2020 07:17 AM
Last Updated : 20 Sep 2020 07:17 AM

‘இன்ஸ்பைரோ’ - மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; ஆர்வமும், கேள்வி கேட்பதும்தான் விஞ்ஞானத்துக்கு அடிப்படை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

ஆர்வமும், கேள்வி கேட்பதும்தான் விஞ்ஞானத்துக்கு அடிப்படை என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்த 3 நாள் ஆன்லைன் நிகழ்ச்சியை சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், என்டிஆர்எஃப் தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை நேற்று முன்தினம் தொடங்கி வைத்து பேசியதாவது:

கேள்வி கேட்பதுதான் விஞ்ஞானத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.விஞ்ஞானி ஆவதற்கு அடிப்படை ஆர்வம்தான். விவசாயம், மருத்துவம், விண்வெளி என பல துறைகளிலும் விஞ்ஞானி ஆகலாம். அந்த வகையில், தமிழகத்தில் இருந்து நிறைய விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், விஞ்ஞானி ஆவதற்கு என்ன படிக்கவேண்டும், என்னென்ன கல்வி உதவித்தொகைகள் பெறலாம் என்பன குறித்து வழிகாட்டும் நோக்கத்திலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு எழும் வினாக்களை எங்களுக்கு தெரிவிக்கலாம். சிறந்த வினாக்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேதியியல் துறை இணைபேராசிரியர் டாக்டர் சக்கரபாளையம் எம்.மகாலிங்கம், ‘மருந்து ஆராய்ச்சி: கல்வி மற்றும் ஆராய்ச்சிவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

அறிவியலும், பொறியியலும்ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் வெளியே தெரிவது மருத்துவர். ஆனால், அவருக்குப் பின்னால் உயிரியல், வேதியியல், பொறியியல் சம்பந்தப்பட்ட நிறைய பேர் இருக்கிறார்கள்.

பல்வேறு நிலைகளை வெற்றிகரமாக தாண்டிய பின்னரே ஒருமருந்து பயன்பாட்டுக்கு வருகிறது.உயிரியலாளர்கள், வேதியியலாளர்கள், பயோ-இன்பர்மர்மேட்டிக்ஸ் நிபுணர்கள், உயிரி தொழில்நுட்ப நிபுணர்கள் என பலதரப்பட்ட துறையினர் திரைக்குப் பின்னால் உள்ளனர். அறிவியல் படிப்புகளில் இளங்கலை, முதுகலை, பிஎச்.டி முடித்து 8 அல்லது 9 ஆண்டுகளில் மருத்துவ விஞ்ஞானி ஆக முடியும்.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் பயோ-மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் படிப்பவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தற்போது பயோ-மெடிக்கல் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, வரும் காலத்தில் இத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ சர்குலேஷன் பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இன்று (செப்.20) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன், ‘தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி): கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

பங்கேற்பு கட்டணம் கிடையாது

இந்த நிகழ்வு இன்னும் 3 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்பு கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை நிகழ்வுகளை தவற விட்டவர்கள் https://www.youtube.com/watch?v=0mvjIsrz0w4 , https://www.youtube.com/watch?v=xNd9PJiAc74 ஆகிய யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x