Last Updated : 18 Sep, 2020 11:42 AM

 

Published : 18 Sep 2020 11:42 AM
Last Updated : 18 Sep 2020 11:42 AM

பள்ளி வளாகத்தில் மகளிர் கல்லூரி: ஏழை மாணவிகளின் கல்விக் கனவு நனவாகிறது

கோவை

கோவை, கரூர், விழுப்புரம், அரியலூர்,விருதுநகர், நாகை, ராணிப்பேட்டை ஆகியஇடங்களில் 2020-2021-ம் கல்வியாண்டில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கபடும் என்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கல்லூரிக் கல்விஇணை இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம் ஆகியோருக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில், “கோவை புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரி செயல்படும் வகையில், அரசுக் கட்டிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அரசுக் கட்டிடம் இல்லையென்றால், தனியார் கட்டிடம் குறித்த விவரத்தைஅரசுக்கு தெரிவிக்கலாம். இது தொடர்பான விவரங்களை, கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு விரைவாகஅனுப்பி வைக்க வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார்.

இதன்படி, புலியகுளம்-லட்சுமிமில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிபெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகம், புதிதாக அரசு மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கும்இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "புலியகுளம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 3.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சுமார் 20 வகுப்பறைகள், கழிப்பறை,தண்ணீர்த் தொட்டி, பெரிய மைதானம் ஆகியவைஅமைந்துள்ள இங்கு 6-ம் வகுப்பு முதல்10-ம் வகுப்பு வரை 80 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கல்லூரி அமைப்பதற்காக, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கல்லூரிக் கல்வித் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டதில், புலியகுளம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகம், கல்லூரி அமைப்பதற்கான அனைத்து சாதகமான அம்சங்களுடன் அமைந்திருப்பது கண்டறியப் பட்டது.

எனவே, அரசு மகளிர் கல்லூரி அமைக்க இப்பள்ளியைத் தேர்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கு பயின்றுவரும் பள்ளி மாணவிகளை, அருகிலேயே உள்ள மற்றொரு மாநகராட்சிப் பள்ளியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர்.

கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம் கூறும்போது, "இப்பள்ளியில் கல்லூரி அமைப்பதற்கு, கோவை மாநகராட்சியிடம் தற்காலிக அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், புதிய கல்லூரி தொடங்குதல், பெயர்ப் பலகை வைத்தல் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். முதல்கட்டமாக பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், பி.காம். பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. பி.ஏ. தமிழ் தவிர மீதமுள்ளவை ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளாகும். இம்மாதம் அல்லது அடுத்த மாதத்தில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும். அதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும்" என்றார்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறும்போது, "கோவையில் புதிதாக அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே உள்ள கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டுதோறும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு சுமார் 18,000 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் 10 ஆயிரம் பேர் மாணவிகள்.

ஆனால், மாணவிகளுக்கு 30 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு இருப்பதால், பெரும்பாலான மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால், ஏழை மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக தொடங்கவுள்ள மகளிர் கல்லூரியில் 100 சதவீத இடங்களும் மாணவிகளுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான மாணவிகளுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x