Published : 17 Sep 2020 04:26 PM
Last Updated : 17 Sep 2020 04:26 PM

குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் பெருந்தொற்று: உலக வங்கி கவலை

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்வி, உடல்நலப் பாதுகாப்பை, பெருந்தொற்று அச்சுறுத்தி வருவதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், ''கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது. குறிப்பாக ஏழை நாடுகளில் இந்த வித்தியாசத்தை உணர முடிந்தது.

பெருந்தொற்றுக்கு முன்னால் குழந்தைகளுக்கான உடல்நலம், கல்வி, பள்ளிக் கல்வி ஆகிய காரணிகளில் கணிசமான முன்னேற்றமும் பாதுகாப்பும் ஏற்பட்டிருருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்த வளர்ச்சியை அழித்துவிடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வளர்ந்த நாடுகளில் உள்ள முழுமையான கல்வி மற்றும் போதுமான ஆரோகியத்தைக் கொண்டவர்களின் மனித மூலதனத்தை ஒப்பிடும்போது, குறைவான வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களால் 56 சதவீத மூலதனத்தை மட்டுமே அடைய முடிகிறது.

ஒரு நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் மனித மூலதனம் அவசியம் ஆகும். ஆனால் கரோனா தொற்று எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது. குழந்தைகளிடையே சமத்துவமின்மை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 80 லட்சம் குழந்தைகளுக்குப் போதிய தடுப்பூசிகள் போடப்படவில்லை.

கோவிட் காரணமாக 100 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. இதன்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் 10 ட்ரில்லியன் டாலர்கள் (ரூ.73,60,77,50,00,00,000) இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும். பள்ளி இடைநிற்றலும் அதிகரிக்கும்.

குறிப்பாகப் பெண் குழந்தைகள் அதிக ஏற்றத்தாழ்வைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதற்காக உலக நாடுகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி முதலீடு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x