Last Updated : 17 Sep, 2020 06:51 AM

 

Published : 17 Sep 2020 06:51 AM
Last Updated : 17 Sep 2020 06:51 AM

‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை: 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

கோவை

‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப்பயன்படுத்தத் தடை விதித்து 127நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லியில் அமைந்துள்ள ‘யுஜிசி’ என்றழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1956-ம் ஆண்டு மத்திய அரசால் நாடாளுமன்றதால் சட்டம் இயற்றி தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இவ்வமைப்பானது நாடு முழுவதும் 412 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 53 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 361 தனியார் பல்கலைக்கழகங்கள், 124 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என 950 பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உள் கட்டமைப்பு வசதி கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழகத்துக்கு இணையான கல்வி நிறுவனம் என்று, அதாவது ‘நிகர்நிலை பல்கலைக்கழகம்’ என்ற கவுரவத்தை வழங்கி வருகிறது.

இவ்வகை பல்கலைக்கழகங்கள், ஏதாவது அடையாளப் பெயருடன் உயர்கல்வி நிறுவனம் என்றுமட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும், நிகர்நிலை பல்கலைக்கழகம் (Deemed to be University) என்று சிறியதாக, அடைப்புக்குறிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விதிமுறை உள்ளது.

இந்நிலையில் நிகர்நிலை பல்கலைக்கழங்கள், தங்களை பல்கலைக்கழகங்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகார் எழுந்தது.

இதேபோல் இக்கல்வி நிறுவனங்களில் வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் எனபல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போன்ற பதவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு பல்கலைக்கழகப் பதவிகளுக்கு இணையாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், “நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தங்களை பல்கலைக்கழகம் என்று வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி இணைச் செயலர் அர்ச்சனா தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956, உட்பிரிவு 23-ன் படி, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விளம்பரங்கள், இணையதளம், இணைதள முகவரி, மின்னஞ்சல், கடிதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பல்கலைக்கழகம் என்றபெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகம் என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கூறும்போது, ‘‘ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது என்றால், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலத்திலோ, மாவட்டத்திலோ அமைக்கப்படும். நிகர்நிலைபல்கலைக்கழகம் என்பது பல்கலைக்கழகம் அல்ல. தனியார் கல்வி நிறுவனம் கல்வி, ஆராய்ச்சி,உள்கட்டமைப்பு வசதிகளில் சிறந்து விளங்குகிறது என்றால், அந்நிறுவனத்துக்கு நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற அடையாளம் வழங்கப்படும்.

அவை உயர்கல்வி நிறுவனம் என்றே அழைக்கப்பட வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று அடைப்புக்குறிக்குள் சிறிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதைவிடுத்து தங்களை பல்கலைக்கழகங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது சட்டப்படி தவறு. பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பியதோடு நிறுத்திக் கொள்ளலாம். இவ்வகைப் பல் கலைக்கழகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டியது அவசியம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x