Published : 15 Sep 2020 06:54 AM
Last Updated : 15 Sep 2020 06:54 AM

‘இந்து தமிழ் திசை’, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’; செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தகவல்

சென்னை

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சவீதா இன்ஜினீயரிங் கல்லூரியுடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை கடந்த 13-ம் தேதி நடத்தியது. இதில், ‘இண்டஸ்ட்ரி 4.0’ எனப்படும் 4-ம் தொழில்புரட்சியின் கூறுகளான செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி, குவான்டம் கம்ப்யூட்டிங் படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் என்.ரமேஷ் பாபு:

தொழில்நுட்ப புரட்சியில் தற்போது உருவாகிவரும் தொழில்நுட்பங்கள் ‘இண்டஸ்ட்ரி 4.0’ எனப்படுகின்றன. நாளைய உலகை இவைதான் முற்றிலும் ஆக்கிரமித்திருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் கூறுகளாக திகழும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ், இன்டர்நெட் ஆஃப்திங்ஸ் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. இத்துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இதனால், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தற்போது ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் பேக்டரி, ஸ்மார்ட் மேனுஃபேக்சரிங் என அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்பமயமாகி வருகின்றன. இதில்‘இண்டஸ்ட்ரி 4.0’ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. சைபர் ஸ்பேஸ் எனப்படும்இணையவெளியில் அனைத்து வேலைகளும் வயர்லெஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப் படுகின்றன. உற்பத்தி செலவு குறைவு, அதிக திறன், பாதுகாப்பான சூழல், அதிவேக உற்பத்தி ஆகியவை இதன் பயன்கள் ஆகும்.

அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்திருப்பதுடன், ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் சமீபத்திய முன்னேற்றங்களையும் தெரிந்துகொண்டால் மட்டுமே இத்துறையில் நிலைத்து நிற்க முடியும். கற்றல் என்பது கல்லூரியுடன் முடிந்துவிடாமல், வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியதாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப திறன்களை அவ்வப்போது மேம்படுத்தி வரவேண்டும். இன்ஜினீயரிங் பட்டப் படிப்பில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் போன்ற பாடங்களை பயிலாத மாணவர்கள், அவற்றை சான்றிதழ் படிப்புகளாக தேர்வு செய்து படிக்கலாம். அதற்கு நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பல வாய்ப்புகள் உள்ளன.

ஏஐசிடிஇ கொள்கை மற்றும் கல்வி திட்டமிடல் பணியகத்தின் ஆலோசகர் பேராசிரியர் ஆர்.ஹரிஹரன்:

3-வது தொழில்புரட்சியான டிஜிட்டல் புரட்சியில், நாம் செய்யும் உள்ளீடுகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் இயங்கி வந்தன. ஆனால், ‘இண்டஸ்ட்ரி 4.0’ எனப்படும் 4-ம்தொழில்புரட்சியில், உள்ளீடு செய்யப்படும் தகவல்களை பகுப்பாய்வு செய்து தொழில்நுட்பங்கள் தானாகவே இயங்கக்கூடியதாக இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். அதேநேரம், இத்துறையில் பொருளாதாரம், சமூக பிரச்சினை, தகவல் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக பல்வேறு சவால்களும் உள்ளன. அவற்றை எதிர்கொள்ளத்தக்க, அறிவார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். தற்போது வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி தொடர்பான இன்ஜினீயரிங் படிப்புகளை தொடங்குமாறு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுரை வழங்கி வருகிறது. சிவில்,மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வழக்கமான பாடப் பிரிவுகளில் இடங்களை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட பாடங்களில் புதிய படிப்புகளை தொடங்கஊக்குவிக்கிறோம். அதற்கேற்ப பேராசிரியர்களை தயார்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அந்த வகையில், ஆன்லைன் உட்பட பல்வேறு வழிகளில் 20 லட்சம் பேராசிரியர்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஏஐசிடிஇ முடிவுசெய்துள்ளது. ஸ்வயம், என்பிடிஇஎல் ஆகிய ஆன்லைன்வழி கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விருப்பமான பாடங்களைப் படிக்குமாறும், பட்டப் படிப்பில் அதற்கான கிரெடிட் வழங்குமாறும் இன்ஜினீயரிங் கல்லூரிகளை அறிவுறுத்தி வருகிறோம்.

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ‘மெட்சிக்ஸ்’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிகின் தரன்:

மாறிவரும் புதிய சூழலுக்கேற்ப தங்களை எளிதில் தயார்படுத்திக்கொள்ளும் திறனும், புதிய விஷயங்களை கற்கும் ஆர்வமும் இருந்தால், ‘இண்டஸ்ட்ரி 4.0’ சூழலை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள முடியும். சாதிக்க வேண்டும் என்ற வெறியும், புறக்கணிப்புகளை கையாளும் திறனும் புதிய தொழில்முனைவோருக்கு மிக மிக அவசியம். நம் வெற்றி நம் கையில்தான் இருக்கிறது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். ஒருவரால் ஒரு விஷயத்தை செய்ய முடிகிறது என்றால், நம்மாலும் அதை செய்ய முடியும் என்று மாணவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் உதவித் தொகைகளுடன் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான அடிப்படை தகவல்கள், நுழைவுத் தேர்வு விவரங்களைத் தெரிந்துகொண்டு, பிளஸ் 1 படிக்கும்போதே தயாரானால் வெளிநாட்டுக் கல்வி அனைவருக்கும் சாத்தியமானதுதான்.

சென்னை கூகுள் டெவலப்பர் குரூப், க்யூப் சினிமாஸ் இன்ஜினீயரிங் பிரிவு தலைவர் எம்.சோமசுந்தரம்:

நம்மிடம் இன்று ஏராளமான தரவுகள் (டேட்டா) இருக்கின்றன. அவற்றை எப்படி சேமித்து வைப்பது என்பது குறித்தும் அதிகமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கு அடிப்படை தேவையே இந்த டேட்டா எனப் படும் தரவுகள்தான். அந்த தரவுகளை ஆராய்ந்து, அடுத்தகட்ட நகர்வை துல்லியமாக கணிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டோமொபைல், வங்கி, விவசாயம், சினிமா என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் தொழில் நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துறையில் ஏற்பட்டுவரும் அசுர வளர்ச்சி காரணமாக, வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படும். இப்போதே அதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. எனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் நிபுணர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/2ZARMEi என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x