Last Updated : 14 Sep, 2020 05:30 PM

 

Published : 14 Sep 2020 05:30 PM
Last Updated : 14 Sep 2020 05:30 PM

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு: வீடுகளே தேர்வு மையம்- ஆன்லைனில் வினாக்கள் அனுப்ப ஆயத்தமாகும் கல்லூரிகள்

துணைவேந்தர். கல்லூரி முதல்வர் பாண்டிராஜா, மாணவர் அசாரூதின்

மதுரை   

கரோனாவைத் தடுக்கும் நோக்கில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வை எழுதும் வகையில், வினாக்களை ஆன்லைனில் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உருவானது. முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர்ஸ் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டாலும், இறுதியாண்டு இளநிலை, முதுகலை மாணவர்களுக்கான 6-வது, 4-வது செமஸ்டர்களை நடத்த உயர்க்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்ற அந்தந்த அரசு, தனியார் கல்லூரிகளில் தேர்வு மையம் ஏற்பாடு செய்து நேரடியாக மாணவர்களை தேர்வில் பங்கேற்க செய்யலாம் என, உயர்க் கல்வித்துறை யோசித்தது.

செப்.,16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இத்தேர்வை நடத்தத் திட்டமிட்டனர். இதற்கான முன்னேற்பாடுகளும் கல்லூரிகள், பல்கலை நிர்வாகங்கள் மேற்கொண்டன.

இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்பு உயர்க் கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பின், கரோனாவை தடுக்கும் நோக்கில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வை எழுதும் வகையில், வினாக்களை ஆன்லைனில் அனுப்புவது என, முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக கல் லூரி முதல்வர்கள், அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க துணைவேந்தர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாளை மறுநாள் (செப்., 16ல்) தொடங்கும் இத்தேர்வை இளநிலை, முதுநிலை, எம்சிஏ இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என, அதிகாரி கள் தெரிவித்தனர்.

இது குறித்து காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கூறியது:

பல்கலை நிர்வாகத்திற்கு உட்பட அனைத்துக் கல்லூரி முதல்வர்களிடம் ஆன்லைனில் வினாக்கள் அனுப்பி வீடுகளில் தேர் வெழுதும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்ன. செப்., 16-ல் தேர்வு தொடங்கும்.

அவரவர் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வெழுதலாம். ஒவ்வொரு மாணவருக்கும் காலை 9 முதல் 9.45 மணிக்கு ஆன்லைனில் வினாக்கள் அனுப்பி வைக்கப்படும்.

லேப்-டாப், செல்போனில் பதிவிறக்கம் செய்யவேண்டும். 10 மணிக்கு தேர்வு தொடங்கும். பெற்றோர் அல்லது வீட்டில் இருப்பவர்களே தேர்வு கண்காணிப்பாளர்கள்.

விடைத்தாளில் பெற்றோர், பாதுகாவலர்கள் கையெழுத்திட வேண்டும். தேர்வு முடிந்த பின், விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து, பிடிஎப் பைலாக மாற்றி அந்தந்த கல்லூரி நிர்வாகம் வழங்கும் இணைய முகவரிக்கு ஆன்லைனில் அனுப்ப வேண்டும். ஏதாவது இடையூறு இருந்தால் தேர்வு முடிந்த 1 மணி நேரத்திற்குள் தபாலில் அனுப்பலாம்.

கல்லூரிகளுக்கு அருகிலுள்ள மாணவர்கள் விடைத்தாள்களை கல்லூரிக்கு சென்று நேரிலும் வழங்கலாம். இத்தேர்வு பற்றி மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.

கல்லூரிகளில் வந்து, எழுதுவதற்கு பதில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே எழுதுகிறீர்கள். உயிரா அல்லது தேர்வா என்றால் உயிர் தான் முக்கியம் என்பதால் அரசு இந்த ஆன்லைன் தேர்வு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர் கள், பெற்றோர் ஒத்துழைக்கவேண்டும். பார்வையிழந்த மாணவர் களுக்கு உதவியாளர்களை அந்தந்த கல்லூரிகள் நிர்வாகம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம், என்றார்.

அரசுக் கல்லூரி முதல்வர் காந்திமதி கூறுகையில், ‘‘ இந்த நேரத்தில் உயிரா, தேர்வா எனில் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்கள் வீடுகளில் இருந்தே தேர்வெழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்வுக்கு தயாராக உள்ளோம். கிரா மப்புற மாணவர்களுக்கான தடையில்லா இணைய வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். லேப்-டாப் வசதி யில் லாதவர்கள் செல் போன்களில் நெட் இணைப்புடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

தியாகராசர் கல்லூரி முதல்வர் பாண்டிராஜா கூறுகையில், ‘‘ எங்களது கல்லூரியை பொறுத்தவரை ஏற்கனவே ஆன்லைன் தேர்வுகளை நடத்தி இருக்கிறோம். எங்களது மாணவர்களுக்கு பழகி போன ஒன்று. அகமதிப்பீடு (இன்டர்னல்) தேர்வு கூட ஆன்லைனில் நடத்தினோம். மாற்றுத்திறனாளி, பார்வையிழந் தவர்களுக்கு உதவியாளர்கள் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய திட்டமிடுவோம்,’’ என்றார்.

முகமது அசாருதீன் (பி.காம் இறுதியாண்டு) கூறுகையில், ஆன்லைனில் வினாக்கள் அனுப்பி தேர்வு நடத்துவது அனைத்து மாணவர்களுக்கு சாத்தியமாகாது.

கிராமப்புற மாணவர்கள் பலருக்கு ஆன்ராய்டு போன் வசதி இல்லை. அலங்காநல்லூர் போன்ற கிராமங்களில் நெட் வசதி சரியாக கிடைக்காது. நான் பட்டன் செல்போன் வைத்திருக்கிறேன்.

இரண்டு நாளில் ஆன்ராய்டு எப்படி வாங்க முடியும். சிலரின் வீடுகளில் தனிஅறை இருக்காது. அமைதியான சூழலில் தேர்வெழுத முடியாது. இது மாதிரி நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது. என்னை போன்ற ஏழை மாண வர்களுக்கு டிகிரியில் தேர்ச்சி பெறுவது கனவு. கல்லூரியில் நேரில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் 5வது செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற செய்யலாம்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x