Published : 14 Sep 2020 02:19 PM
Last Updated : 14 Sep 2020 02:19 PM

வகுப்பறைகளில் கற்றல் செயல்பாடுகள்: என்னென்ன கட்டுப்பாடு?- மத்திய அரசு விதிமுறை வெளியீடு

செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து வகுப்பறைகளில் கற்றல் செயல்பாடுகளை நிகழ்த்துவது குறித்த விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்துத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* திறன் பயிற்சி நிறுவனங்கள், ஆய்வகப் பணி தேவைப்படும் தொழில்நுட்பத் திட்டங்களுக்கான வகுப்புகளை நடத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான அனுமதி செப்.21 முதல் வழங்கப்படுகிறது.

* வகுப்பறைகளில் நாற்காலிகள், மேசைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி பின்பற்றப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

* போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வகுப்பறைகளுக்குள் தொற்றைத் தடுக்கவும் பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* கல்வியாண்டு அட்டவணை வழக்கமான வகுப்பறைச் செயல்பாடுகள் மற்றும் ஆன்லைன் மதிப்பீடு ஆகியவை கலந்ததாக இருக்கவேண்டும்.

* ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் கற்றல் செயல்பாடுகள் முழுவதிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை ஆசிரியர்களே உறுதி செய்ய வேண்டும்.

* மடிக்கணினி, நோட்டுப் புத்தகம், பேனா உள்ளிட்ட பயன்பாட்டுப் பொருட்களை மாணவர்கள் பகிர்ந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்.8-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைக் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில், கரோனா கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு வரலாம். கட்டுப்பாட்டு மையங்களுக்குள் இருக்கும் பள்ளிகளுக்கு யாரும் செல்லக் கூடாது. அதே நேரத்தில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள்/ பாதுகாவலர்களின் அனுமதி பெற்று, ஆசிரியர்களின் வழிகாட்டலைப் பின்பற்றியே பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x