

நாடுமுழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகின்றனர். அவர்கள் சோதனை செய்யப்பட்டு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், நாமக்கல், சேலம், கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 8 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
கரோனா பரவல் அச்சம் இருப்பதால் மாணவர்கள் போதிய இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வகை யில் இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களும் கிருமிநாசினி யால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகளை தனித்தனி வரிசையில் போதிய இடைவெளியில் நிற்கவைத்து சோதனை செய்ய வேண்டும். உடலை தொட்டு சோதனை செய்யக் கூடாது. சற்று தொலைவில் இருந்தபடி, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருக்கிறதா என்று வெப்பமானியால் பரிசோதிக்க செய்ய வேண்டும். உடல் வெப்பம் 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் உள்ள மாணவர்களை தனி அறையில் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று தேர்வு மைய பொறுப்பாளர் களுக்கு பல்வேறு அறிவுறுத் தல்களை என்டிஏ வழங்கி யுள்ளது.
நீட் தேர்வு எழுத வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம், கையுறை அணிந்து, ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும். தேர்வர்கள் பகல் 1 மணி வரை மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர். 50 மிலி அளவு கொண்ட சானிடைசர், உட்புறம் தெளிவாக தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் கொண்டுவரலாம்.
ஹால் டிக்கெட்டுடன், அரசு வழங்கியுள்ள புகைப் பட அடையாள அட்டை, விண்ணப்பிக்க பயன்படுத்திய அதே புகைப்படம் ஆகிய வற்றை கொண்டுவர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.
செல்போன் உட்பட எந்த ஒரு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. லோ ஹீல்ஸ் காலணி மட்டுமே அணிய வேண்டும் என்பன உட்பட மாணவர்களுக்கு பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
தேர்வு நடைபெறுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பாக மையங்களுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்படுவதற்கு ஏதுவாக கூடுதல் நேரம் தேவை என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஏற்ப மாணவர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகின்றனர். அவர்கள் சோதனை செய்யப்பட்டு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.