Published : 12 Sep 2020 12:30 PM
Last Updated : 12 Sep 2020 12:30 PM

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை: பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதித்துள்ளது. அத்துடன் 2020-21 ஆம் கல்வியாண்டில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகள் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் அங்கீகாரம் பெறுவதற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நிலுவையில் வைத்துள்ள கல்லூரிகள் மற்றும் தகுதிகள் குறைவாக உள்ள கல்வியியல் கல்லூரிகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

''தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தில் (NCTE) அங்கீகாரம் இல்லாத மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே 2020-21 ஆம் கல்வியாண்டில் பட்டியியலில் உள்ள கல்லூரிகளில் பி.எட்., எம்.எட்., பி.ஏ.-பி.எட்., பி.எஸ்சி- பி.எட்., படிப்புகளில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்விதப் பொறுப்பும் ஏற்காது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் பெறாத மற்றும் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x