Published : 12 Sep 2020 07:19 AM
Last Updated : 12 Sep 2020 07:19 AM

கரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பில் தாமதம் பள்ளிக்கல்வியில் பாட அளவு 40% குறைப்பு: நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்

சென்னை

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வியில் பாடஅளவை 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு சார்பில் பல்வேறுகட்ட ஆலோசனைக் கூட்டங்கள்நடத்தப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கருத்துகளும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல்கட்ட பரிந்துரை அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் கடந்த ஜூலை 14-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், இணையவழி கல்விக்குநேரக் கட்டுப்பாடு விதித்தல், மாணவர் சேர்க்கை பணிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இதைத்தொடர்ந்து பள்ளி திறப்பு மற்றும் பாடஅளவு குறைப்பு தொடர்பான 2-ம் கட்ட அறிக்கையை நிபுணர் குழு தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளமாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதையேற்று முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் பள்ளிகளைத் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், அதற்கேற்ப பாடஅளவைக் குறைக்கவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அந்த அறிக்கையில், கல்வி ஆண்டு தாமதத்தால் பாடங்களை நடத்திமுடிக்க போதிய கால அவகாசம் இருக்காது. எனவே, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதமும், இதர வகுப்புகளுக்கு சூழலுக்கு ஏற்ப 40 சதவீதம் வரையும் பாடஅளவைக் குறைக்க வேண்டும்.

அதேநேரம் அடிப்படை கருத்துகளுடன் தொடர்புடைய கூடுதல் பகுதிகள் மற்றும் அதிக அளவிலான பயிற்சி வழிமுறைகள் நீக்குதல் அடிப்படையில் பாடத்திட்டக் குறைப்பு அமைய வேண்டும்.

மேலும், மாணவர்களுக்கு சிரமங்களைத் தவிர்க்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்பன உள்ளிட்டஅம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x