

புத்தகமும் கையுமாக வட்ட வடிவமாக அமர்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். நடுவில் ஒளி உமிழும் விளக்கிலிருந்து பளிச்சென வெளிச்சம். குழந்தைகளின் கண்களிலோ அதைவிடப் பிரகாசம். வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத ஒன்று கிடைத்துவிட்டது போன்றதொரு பரவசம்.
“முந்தியெல்லாம் பகல்லதான் படிக்க முடிஞ்சுது. இப்ப ராத்திரியிலயும் படிக்க முடியுது. அதுக்கு இந்த விளக்குதான் காரணம்” என்று குழந்தைகள் குதூகலிக்க, இவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பெண்ணோ, “முந்தி பகலில் படிக்கக் கூப்பிட்டா குழந்தைகள் அவ்வளவு சுலபமா வர மாட்டாங்க. இப்ப இந்த விளக்கு வந்ததிலிருந்து விளக்கு வெளிச்சத்துல படிக்கணும்ங்கிற ஆர்வத்துல நிறைய பேர் வர்றாங்க” எனச் சொல்லிப் பூரிக்கிறார்.
இத்தனைக்கும் அந்தக் காலத்தில் கிராமங்களில் பயன்படுத்தப்பட்ட அரிக்கேன், பெட்ரோமாக்ஸ் போன்ற விளக்குதான் இது. சூரிய மின்சக்தியில் எரியக்கூடியது. இதற்கே இவ்வளவு சந்தோஷமா எனக் கேட்காதீர்கள். மின்வசதியை மருந்துக்குக்கூடக் கண்டிராத மலைக் கிராம மக்களின் பிள்ளைகளுக்கு இந்த விளக்கே அபூர்வமான விஷயம்தான். இதை ஏற்பாடு செய்து தந்திருப்பது பொள்ளாச்சியைச் சேர்ந்த பழங்குடிச் செயல்பாட்டாளர் தனராஜ்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனராஜ், “ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியைச் சேர்ந்த 18 பழங்குடி மற்றும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் கிராமங்களில் மகாத்மா காந்தி மாலை நேரக் கல்வி மையங்களை நடத்தி வருகிறோம். அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இங்குள்ள குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, இப்போது அந்த மையங்கள் உள்ள கிராமங்கள் மட்டுமின்றி வேறு சில கிராமங்களுக்கும் விளக்குகளை வழங்கியுள்ளோம்.
இதை ஏற்பாடு செய்த ‘சிற்பி’ அறக்கட்டளை ஏற்கெனவே இந்த மக்களுக்குப் பல உதவிகள் செய்திருக்கிறது. கரோனா காலத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறது. அவற்றை வழங்குவதற்காக, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் தாத்தூர் பக்கம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவுக்குச் சென்றிருந்தோம். அங்கு அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட 43 தொகுப்பு வீடுகளில் 2 வீடுகளில் மட்டுமே மின் இணைப்பு இருப்பது தெரியவந்தது. மற்றவர்கள் இருட்டிலேயே வாழ்கிறார்கள்.
இங்கே உள்ள குழந்தைகள் படிப்பதற்குக்கூட எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்த வேண்டிய நிலை. மலைக் கிராமங்களிலும் இதுபோன்ற நிலைதான். இதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்யலாமே என ‘சிற்பி’ அறக்கட்டளையிடம் கேட்டிருந்தோம். உடனடியாக இந்த விளக்குகளை ஏற்பாடு செய்தார்கள்.
மதிய உணவு, சத்துணவு, இலவசச் சீருடை போன்றவற்றைப் பெறுவதற்காகவேனும் குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு ஓடிவந்ததைப் பார்த்திருக்கிறோம். இப்போது இங்குள்ள குழந்தைகள் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிவருகிறார்கள். மொத்தம் 35 விளக்குகள் 18 கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது சிறு வெளிச்சம்தான். எதிர்காலத்தில் இக்குழந்தைகளின் எதிர்காலம் மேலும் வெளிச்சம் பெறும் என்று நம்புகிறோம்” என்றார் தன்ராஜ்.