

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய ‘NEET-ஐ பிடிப்போம்’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த ஞாயிறு தொடங்கி, 3 நாட்கள் நடைபெற்றது.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு செப்.13-ம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வில் தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், ‘நீட்’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில்‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் உடன் இணைந்து ‘NEET-ஐ பிடிப்போம்’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை செப். 6, 8, 10 ஆகிய 3 நாட்கள்நடத்தியது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே.சுரப்பா நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது, “மாணவர்கள் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வுக்காக படிக்கிறோம் என்ற எண்ணத்தை விடுத்து, புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம் என்ற எண்ணத்தோடு படிக்க வேண்டும்” என்றார்.
முதல்நாள் ‘இவ்ளோதான் இயற்பியல்’ எனும் தலைப்பில், சென்னைபிரசிடென்சி கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராதிகா, முதுகலை இயற்பியல் ஆசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் இயற்பியல் வினாக்கள் குறித்த வழிகாட்டல்களை வழங்கினர்.
மேலும், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் ஹரிஹரன், தான் தேர்வுக்கு தயாரான விதம் மற்றும் உத்திகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
2-ம் நாள் ‘வெல்லும் வேதியியல்’ எனும் தலைப்பில், சென்னைபல்கலை. முன்னாள் வேதியியல்துறை தலைவர் பாலசுப்பிரமணியன், வேதியியல் தேர்வை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டல்களை வழங்கினார். சேலத்தைச் சேர்ந்த சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி இலக்கியா, தேர்வை எதிர்கொள்வது பற்றியும், தேர்வறையில் நேர மேலாண்மை குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
3-ம் நாள் நிகழ்வில், இந்தியவருமானவரி கூடுதல் ஆணையர்வி.நந்தகுமார், தனது அறிமுகவுரையில், “நீட் தேர்வில் உயிரியல் பகுதியில் 90 வினாக்கள் இடம்பெறும். தாவரவியலையும், விலங்கியலையும் உள்ளடக்கிய உயிரியல் பகுதியில், பெரும்பாலும் வினாக்கள் பாடப்புத்தகத்தில் இருந்து அப்படியே கேட்கப்படும்.பாடத்தில் இடம்பெறும் முக்கியமான பதங்கள், அடிக்கோடிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் தகவல்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார்.
காமராஜ் ஐஏஎஸ் அகாடமியின் தலைமை நிர்வாகி காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
உயிரியல் பகுதியில் எந்த மாதிரியான வினாக்கள் கேட்கப்படும், அவற்றுக்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்பன குறித்து பேராசிரியர்கள் டாக்டர் சுல்தான் இஸ்மாயில், டாக்டர் டி.பி.பாண்டியன், டாக்டர் சா.முத்தழகு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
நிறைவாக, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் ஒருங்கிணைத்தார்.