Last Updated : 09 Sep, 2020 05:08 PM

 

Published : 09 Sep 2020 05:08 PM
Last Updated : 09 Sep 2020 05:08 PM

கோவையில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது: இணையவழிக் காணொலிப் பாடத்திட்டம் தயாரித்த மூவருக்குச் சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 13 ஆசிரியர்கள். | படம்: ஜெ.மனோகரன்.  

கோவை

கோவை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இணையவழியில் காணொலிப் பாடத்திட்டம் தயாரித்த மூவருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வானோர் விவரத்தைக் கடந்த செப். 5-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மாநிலம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் விவரம்:

1. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கோ.சொர்ணமணி.
2. சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வி. அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தனசேகரன்.
3. ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கோ.பூரணி புனிதவதி.
4. குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ச.சந்திரசேகரன்.
5. அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ரா.செல்வராணி.
6. வெள்ளமடை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ரேவதி.
7. பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.முரளீதரன்.
8. பொம்மணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ப.பிரேமா.
9. பொள்ளாச்சி குப்பாண்ட கவுண்டர் ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியை ப.பரிமளம்.
10. ஐ.சி.சி. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை அ.ஜெசிந்தாமேரி.
11. எஸ்.அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ம.சிவகணேசன்.
12. ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியை ச.விஜயலட்சுமி.
13. ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் ரா.சகுந்தலாமணி.

இத்துடன் இணையவழிக் கற்பித்தலுக்கான காணொலிப் பாடங்களைத் தயாரித்தமைக்காக, கோவை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் கே.ராஜா, பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஷோபனா பாரதி, பொள்ளாச்சி ரங்கசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் அ.பிரபுராஜா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x