Last Updated : 08 Sep, 2020 01:25 PM

 

Published : 08 Sep 2020 01:25 PM
Last Updated : 08 Sep 2020 01:25 PM

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: காலியிடங்களை நிரப்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் 2-ம் கட்டக் கலந்தாய்வு. படம்: ஜெ.மனோகரன். 

கோவை

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலியால், காலியிடங்களை நிரப்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 109 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. இதற்கு 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதன் பின்னர் கல்லூரி வாரியாகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த ஆக. 28-ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்.4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதில் சுமார் 20 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியது தெரியவந்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.தாமோதரன், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு ஓர் மனு அனுப்பி இருந்தார்.

அதில், “தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கு நடைபெற்ற முதல் சுற்றுக் கலந்தாய்வில் 20 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதை அறிகிறோம். முதல் சுற்றில் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்த இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை விரைந்து நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

தமிழ், ஆங்கில வழிக்கல்வி, சுழற்சி 1 மற்றும் 2-ல் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். அதன் பின்னரும் காலியிடங்கள் இருப்பின் மாணவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேர்க்கை வழங்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன், அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

“தற்போது விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களது விண்ணப்பத்தை, தகுதியுள்ள பிற பாடப்படங்களில் விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை வழங்கலாம். சுழற்சி 1-ல் இடம் கிடைக்காதவர்களுக்கு, சுழற்சி 2-ல் இடம் அளிக்கலாம்.

இருக்கும் இடங்களைக் காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி மீதுமுள்ள இடங்களை நிரப்ப முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக் குழுவினர் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், முதல்வரின் வழிகாட்டுதலுடன் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் ஆர்.தாமோதரன் கூறும்போது, 'அரசுக் கல்லூரி மாணவர்களின் நலன் குறித்து எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x