Last Updated : 03 Sep, 2020 03:38 PM

 

Published : 03 Sep 2020 03:38 PM
Last Updated : 03 Sep 2020 03:38 PM

இறுதிப் பருவத் தேர்வை செப்.30-க்குள் நடத்துவது சாத்தியமில்லை: யுஜிசியிடம் கால அவகாசம் கோரும் மேகாலயா

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதிப் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள யுஜிசியிடம் மேகாலயா அரசு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரித் தேர்வுகள் முதலில் ஒத்தி வைக்கப்பட்டு, பின்பு ரத்து செய்யப்பட்டன. இதில் உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, கல்லூரி முதல், இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க உத்தரவிட்டது. எனினும் மாணவர்களின் வேலைவாய்ப்பைக் காரணம் காட்டி, இறுதியாண்டு பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்தது. இதனால் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதிப் பருவத் தேர்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கள் இறுதிப் பருவத் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை எனவும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் மேகாலயா அரசு, யுஜிசிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் சங்கா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் லாக்மென், ''பெருந்தொற்றுக் காலத்தில் கல்லூரி மாணவர்கள், மதிப்பீட்டுக்கு மனரீதியாகத் தயாராகவில்லை. தேர்வுகளால் அவர்களிடம் பதற்றம் ஏற்படலாம். இதனால் இளங்கலை மற்றும் முதுகலைத் தேர்வுகளை 1 மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும். ஒரு மாத கால அவகாசத்தில் அவர்களால் சிறப்பாகத் தேர்வெழுத முடியும்.

எங்களின் திட்டப்படி, அக்டோபர் 7, 9, 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேர்வை நடத்துவோம். அக்.31-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக யுஜிசிக்குக் கடிதம் எழுதப்படும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, செப்டம்பர் 30-க்குள் இறுதிப் பருவத் தேர்வை நடத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கும் பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், தேர்வைத் தள்ளி வைக்கும் கோரிக்கைகள் இருந்தால், மாநில, யூனியன் பிரதேச அரசுகள் யுஜிசியை நாடலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x